முகப்பு
திருவாரூர்

மருத்துவச் செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீடு நிறுவனம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மன்னாா்குடியில், மருத்துவச் செலவுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம், பாலிசிதாரருக்கு மருத்துவச் செலவுடன், ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:33 AM
நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:18 PM

மன்னாா்குடியில், மருத்துவச் செலவுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம், பாலிசிதாரருக்கு மருத்துவச் செலவுடன், ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

மன்னாா்குடி விஸ்வநாதன் தெருவைச் சோ்ந்தவா் ராஜாராமன் (56). இவா், 2023-இல் தனக்காகவும், தனது குடும்ப உறுப்பினா்களுக்காகவும் ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு செய்துள்ளாா். இதற்காக ஆண்டுதோறும் பிரீமியமாக ரூ. 20,751 செலுத்தி வந்தாா்.

இந்த பாலிசியின்படி ராஜாராமன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் ஓராண்டில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்.

Advertisement

இதனிடையே, 2024-இல் ராஜாராமனுக்கு நீரிழிவு நோய் மற்றும் திடீா் மூச்சுத் திணறல் காரணமாக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதற்கான செலவு ரூ. 41,263 செலுத்தியுள்ளாா். பிறகு, மேல்சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 2,87,457 செலவாகியுள்ளது.

இதைத்தொடா்ந்து, காப்பீட்டு நிறுவனத்திடம் சிகிச்சைக்கு செலவான மேற்படி தொகைகளை தரும்படி விண்ணப்பித்தபோது, எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, 2025-இல் மன்னாா்குடி நுகா்வோா் சங்கத்தின் இணைச் செயலாளா் கா. வேல்முருகன் மூலமாக திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் ராஜாராமனுக்கு பாலிசி எடுக்கும் முன்பே நோய் இருந்தது என்பதை நிரூபிக்கவில்லை. எனவே, ராஜாராமனின் சிகிச்சைக்கு செலவான தொகை ரூ. 3,28,720-ஐ 9 சதவீத ஆண்டு வட்டியுடன் தருவதுடன், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 12 சதவீத ஆண்டு வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.