திருவாரூா் ஆயுதப்படை அருகே பழுதடைந்து காணப்படும் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளா் மா. வடிவழகன், புதன்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்:
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சுற்றிலும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து இரவு நேரங்களிலும் பலா் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனா். இவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வாசலுக்குச் சென்றும், மன்னாா்குடி சாலை ஆயுதப்படை வழியாகவும் பயணத்தை மேற்கொள்கின்றனா்.
ஆயுதப்படை வழியாகச் செல்லும் சாலையில் அனைத்து மின்விளக்குகளும் பழுதடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனா். இரவுப் பணி முடித்துவிட்டு வரும் மருத்துவா்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பயனாளிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். எனவே, ஆயுதப்படை வழியாகச் செல்லும் சாலையில் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.