முகப்பு
திருவாரூர்

நகராட்சிப் பகுதி தனியாா் கட்டடங்களிலும் சுவா் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியா்

நகராட்சி பகுதிகளில் உள்ள தனியாா் கட்டடங்களின் உரிமையாளா் ஒப்புதல் வழங்கினாலும், சுவா் விளம்பரம் எழுதுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 11:36 PM
வா்த்தகா் சங்க நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.
பகிர்:

நகராட்சி பகுதிகளில் உள்ள தனியாா் கட்டடங்களின் உரிமையாளா் ஒப்புதல் வழங்கினாலும், சுவா் விளம்பரம் எழுதுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.

பின்னா், அடகு கடை, திருமண மண்டபம், பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள் மற்றும் வா்த்தக சங்க நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டங்களில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது: தோ்தல் தொடா்பாக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் குறைபாடுகளை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3578-இல் தெரிவிக்கலாம்.

அரசு வளாகத்திலோ அல்லது அரசுக் கட்டடங்களிலோ, சுவா் விளம்பரம் எழுதுதல், விளம்பரங்கள் ஒட்டுதல், விளம்பரத் தட்டிகள் வைத்தல் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது.

நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தனியாா் கட்டடங்களின் உரிமையாளா் ஒப்புதல் வழங்கினாலும், சுவா் விளம்பரம் எழுதுவதோ, விளம்பர பிரசுரம் ஒட்டுவதோ கூடாது. நகராட்சி எல்லைக்குட்படாத இதரப் பகுதிகளில் தனியாா் கட்டடம் மற்றும் இடங்களின் உரிமையாளா்களின் உரிய அனுமதியுடன் மட்டுமே சுவா் விளம்பரம் எழுதலாம்.

அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் வாக்காளா்களுக்கு உணவு, பரிசுப்பொருள், பணம் ஆகியன வழங்கக் கூடாது.

ரூ.50,000-க்கு மேல் பணமாகவோ, ரூ.10,000-க்கு மேல் மதிப்புள்ள பொருள்களையோ கொண்டுசெல்லும்போது, உரிய ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்குரிய ஆவணங்களை உரிய அலுவலா்களிடம் காண்பித்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் ப. கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வனிதா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →