அன்றைய தில்லி: "என் ஊர் தில்யே'
உத்தர சுவாமிமலை' என்று தில்லிவாழ் மக்களால் பெருமையோடு அழைக்கப்படும் ஆர்.கே. புரம் மலைமந்திர் (ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில்) துணைத் தலைவராக இருந்து வருகிறார் இவர். ""நான் பிறந்த ஊர் சிதம்பரம் அருகேயுள
உத்தர சுவாமிமலை' என்று தில்லிவாழ் மக்களால் பெருமையோடு அழைக்கப்படும் ஆர்.கே. புரம் மலைமந்திர் (ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில்) துணைத் தலைவராக இருந்து வருகிறார் இவர்.
""நான் பிறந்த ஊர் சிதம்பரம் அருகேயுள்ள கீழப்பருத்திக்குடி. தந்தை சுப்பிரமண்ய ஐயர், பட்டாமணியமாக இருந்தவர். அதாவது மணியக்காரர். சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிப்பில் சேர்ந்திருந்த நேரம் அது. அப்போது, தில்லி மத்திய செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமா சுப்பிரமணியம் வீட்டுக்கு வர வேண்டியிருந்ததால், 1940-ம் ஆண்டில் எனது அத்தையுடன் தில்லி வந்தேன். அப்போது, இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது.
தில்லி வந்து வேலைகளை முடித்துவிட்டு ஊர் திரும்ப நினைத்திருந்த நான் இங்கேயே தங்க வேண்டியதாயிற்று. எனது ஊர் தில்லியும் என்றாகிவிட்டது.
யு.பி.எஸ்.சி. (கீழ்நிலை டிவிஷன் கிளார்க்) தேர்வு எழுதி பாஸ் செய்தேன். டைரக்டர் ஜெனரல் ஹெல்த் சர்வீஸ் துறையில் சேர்ந்தேன். ஆங்கிலேயருக்குக் கீழ் பணியாற்ற வேண்டிய நிலை. எனினும் சிறப்பாகப் பணியாற்றினேன். இதனால், ஆங்கில அதிகாரியிடம் மூன்று முறை பாராட்டுச் சான்றிதழ் பெற்றேன். இதே துறையில் 40 ஆண்டுகள் பணியாற்றி துணை இயக்குநர் அந்தஸ்தில் 1980-ம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். அதன் பிறகும் அரசு உதவிபெறும் வேறொரு துறையில் இரண்டரை ஆண்டுகள் பணி செய்தேன்.
இதனிடையே, 1944-ல் ஆண்டில் தொடங்கிய எனது ஆன்மிகப் பணியும் தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. 1950-ம் ஆண்டில் சண்முகானந்த சங்கீத சபாவை ஆரம்பித்தேன். 1961-ல் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி மலைக்கோயில் நிறுவனர் என்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
அரை நூற்றாண்டுக்கு முந்தைய தில்லியை நினைக்கும்போது மலைப்பும், மகிழ்வும்
மனத்திரையில் மாறிமாறி ஓடுகின்றன.
70 ஆண்டுகளுக்கு முன்பு நான் தில்லிக்கு வந்தபோது புது தில்லி ரயில் நிலையம் ஒரு பார்சல் அலுவலகம், டிக்கெட் அலுவலகம் என இரண்டு சிறிய கட்டடங்களோடுதான் காட்சியளித்தது.
என் மாமாவுடன் அரசுக் குடியிருப்பில் பஞ்ச் குயீன் சாலையில் வடபாகத்தில் உள்ள சித்ரகுப்தா சாலையில் வசித்து வந்தேன். தில்லியில், வடக்கு, தெற்கு பிளாக்குள் மட்டுமே அப்போது இருந்தன.
கனாட் பிளேஸ் பகுதியில் அமைந்திருந்த சொகுசுச் சந்தைக்கு வெள்ளைக்காரர்கள் அதிகம் வருவார்கள். இப்பகுதியில் மதுபானக் கடை, தையல் கடைகள், புத்தகக் கடைகள் ஆகியவை இருந்தன.
இரு தமிழ்நாடு ஹோட்டல்களும் இருந்தன. தற்போதுள்ள சிவாஜி ஸ்டேடியம் அருகே மெட்ராஸ் ஹோட்டல் (சுப்பா ராவ் ஹோட்டல்) இருந்தது. சௌத் இந்தியா போர்டிங் ஹவுஸýம் இருந்தது. இங்கே தமிழர்கள் அதிகம் பேர் தங்குவர். நாராயண ஐயர் நடத்தி வந்த ஹோட்டலில் மாதம் ரூ. 15 கொடுத்தால் இரு வேளை உணவு கொடுப்பார்கள். மாதம் ரூ. 40 கொடுத்தால் தங்குவதுடன் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கனாட் பிளேஸில் டிரிவோலி, ரீகல், பிளாஸô என மூன்று தியேட்டர்கள் இருந்தன. சாந்தினி சௌக்கில் மோதி தியேட்டர் இருந்தது. கனாட் பிளேஸ் பகுதி தியேட்டர்களுக்கு நிறைய பேர் சினிமா பார்க்க வருவதுண்டு.
ஆங்கிலப் படங்கள்தான் அதிகம் திரையிடப்பட்டன. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தமிழ்ப்படம் காட்டப்படுவதுண்டு. ரூ. 2, 4, 5 ஆகிய கட்டணங்களில் சினிமா டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. வெள்ளைக்காரர்கள்தான் உயர் வகுப்பு டிக்கெட் எடுத்துச் செல்வர். தியேட்டர் வளாகம் மிகவும் தூய்மையாக இருக்கும்.
கனாட் பிளேஸ் அருகே அரசுக் குடியிருப்பு மற்றும் அலுவலர் பங்களாக்கள் இருந்தன. தற்போதும் அவை இருக்கின்றன. கனாட் பிளேஸின் கீழ்பகுதியில் மின்டோ சாலையும், வடபகுதியில் கோல் மார்க்கெட்டும் இருந்தன. அந்தப் பகுதிகளில் மட்டுமே அரசுக் குடியிருப்புகள் இருந்தன. அதாவது, சுமார் ஆயிரம் அளவிலேதான் அரசு உயர் மற்றும் நடுத்தர அலுவலர்களின் குடியிருப்புகள் இருந்தன.
அப்போதெல்லாம் அரசின் கீழ்நிலைப் பணியாளர்களுக்கு வாகன வசதியெல்லாம் கிடையாது. குவாலியர் நார்த் இந்தியன் டிரான்ஸ்போர்ட் என்கிற ஜி.என்.ஐ.டி. தனியார் பஸ்தான் போக்குவரத்துக்கான பயன்பாட்டில் இருந்தது.
அந்தப் பஸ் குறித்த நேரத்துக்கு வராது. இஷ்டம்போல் வரும். இதனால், பொதுஜனங்கள் ஜி.என்.ஐ.டி. பஸ்ஸின் பெயரை "கியாரண்டி நெவர் இன் டைம்' என பரிகாசத்துடன் அழைப்பார்கள்.
அக்காலக் கட்டத்தில் டாக்ஸி, ஆட்டோ ஏதும் இல்லை. ஆங்கிலேயர்கள் உள்பட எல்லோரும் சைக்கிள், குதிரை வண்டியைப் பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆங்கிலோ-இந்தியன் மகளிர்தான் அதிகமாக அலுவலக வேலைக்கு வருவார்கள். அவர்கள் பலர் அலுவலகத்துக்கு சைக்கிளில்தான் வருவர்.
மின்டோ ரோடுக்கு அருகில் உள்ள காரிபோலியில் இருந்துதான் 3 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வருவோம். அதுவும் ரூ. 25-க்குள் நிறைய சாமான்களை வாங்கி விடுவோம். மின்டோ சாலையின் கீழ்ப் பகுதிக்கு அருகில் உள்ள தரியாகஞ்ச் பகுதியில் உள்ள காய்கறி மண்டியில் இருந்து ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்குவோம்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது அலுவலகப் பணிக்கு குறித்த நேரத்திற்குள் வர வேண்டும். ஒரு நாள் காலை 9 மணிக்குப் பதிலாக 10 நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றேன். அங்கிருந்த அதிகாரி கர்னல் போஸ்மென் "யுவர் சர்வீஸ் நாட் ரிகொயர்டு' என்று கூறிவிட்டார். வேலை போய்விட்டது என்று ஒரு நிமிடம் அதிர்ந்துபோனேன்.
பிறகு, அவரே மீண்டும் கூறினார். "யுவர் சர்வீஸ் இஸ் நாட் ரிக்கொயர்டு டுடே' என்று. அப்போது தான் எனக்கு நிம்மதி வந்தது. அன்றிலிருந்து நான் பணி ஓய்வுபெறும் வரை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
வெள்ளைக்காரர்கள் பணிநேர ஒழுங்கைக் கற்றுக் கொடுத்தனர் என்றே சொல்ல வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் இருந்த வரை தில்லியில் பெரிய அளவிலான கட்டட வசதிகள் ஏதும் இல்லை. இரண்டு வடக்கு, தெற்கு செயலகக் கட்டடங்கள் மட்டுமே இருந்தன. அவர்கள் சென்ற பிறகுதான் கட்டடங்களும், நகர விரிவாக்கமும் ஏற்பட்டன. நான் வேலைபார்த்த டைரக்டர் ஜெனரல் ஹெல்த் சர்வீஸ் அலுவலகத்தில் 1940-ம் ஆண்டுக் காலக்கட்டத்தில் 14 பேர்தான் வேலை செய்தோம். இன்றைக்கு அங்கு 2 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். எத்தனை வித்தியாசம் பாருங்கள்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தால் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை வேலைக்கு வந்தாலும், வராவிட்டாலும் வெள்ளையர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அவர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்ததே அதற்குக் காரணம்.
தற்போதைய ஐ.ஏ.எஸ். பதவி போன்று, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐ.சி.எஸ். பதவி இருந்தது. இப்பதவிக்கு லண்டனில் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தில்லியில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஒய். கிருஷ்ணசாமி, எஸ். பூதலிங்கம் (வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மாமனார் மட்டுமல்ல பழம் பெரும் பெண் எழுத்தாளர் கிருத்திகாவின் கணவரும்கூட. கிருத்திகா "வாசவேஸ்வரம்' உள்ளிட்ட அற்புதமான நாவல்களை எழுதி புகழ்பெற்றவர்.), டி. சுவாமிநாதன், எஸ். ரங்கநாதன், சி.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் ஐ.சி.எஸ். அதிகாரிகளாக இருந்தனர்.
அப்போதெல்லாம் யமுனை ஆறு மிகவும் தூய்மையாக இருக்கும். தெளிந்த யமுனையின் நீரோட்டத்தில் நீந்திக் களிக்க பலரும் விரும்புவர்.
1942-ம் ஆண்டில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் வீறுகொண்டிருந்த சமயம். தில்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு நாள் மாலை 5 மணிக்குப் பெரிய கூட்டம் நடைபெற்றது. அதில் ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் கலந்துகொண்டு பேச இருந்தனர்.
20 வயது இளைஞனான நானும் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். திடீரென வெள்ளையர் அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதால், கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மீது போலீஸôர் துப்பாக்கிச் சூடும், தடியடிப் பிரயோகமும் நடத்தினர். நான் உள்பட பலரும் நாலா பக்கமும் சிதறி ஓடினோம். இதில் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இது மிகவும் என்னை பாதித்த சம்பவம். அதேபோன்று, 1947-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்து-முஸ்லிம் கலவரமும் என்னை மிகவும் மனம் பாதிக்கச் செய்த சம்பவம்.
மகாத்மா காந்தி அவர்கள் தில்லி வரும்போதெல்லாம் பஞ்ச் க்யூன் சாலையும், ரீடிங் ரோடும் சேரும் இடத்தில் உள்ள பங்கி காலனி எனக் கூறப்பட்ட, கீழ்வகுப்பினர் குடியிருக்கும் பகுதி குடிசையில்தான் தங்குவார். மாலையில் பிரார்த்தனைக் கூட்டமும் அங்குதான் நடைபெறும். 1947-ம் ஆண்டில் 45 நாள்கள் அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்தார். அப்போது, தினமும் நானும், எனது மனைவி விஜயலட்சுமியும் மாலை வேளையில் நடைபெறும் அவரது பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று வருவோம். அதை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது. அதை நானும் எனது மனைவியும் பாக்கியமாகவே கருதுகிறோம்'' என்று அகமும், முகமும் மலர பூரிக்கிறார் பட்டாபிராமன்.
விஜயலட்சுமி பட்டாபிராமனின் (83) நினைவலைகளில்...: ""அந்தக் காலத்தில் எல்லாம் இத்தனை திருட்டுப் பயம் இல்லை. வீட்டு முன்பாக கட்டில் போட்டுத்தான் படுப்போம். ஆனால், மருத்துவ வசதி சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. எனக்கு கூட இரண்டு பிரசவங்கள் வீட்டில்தான் நடைபெற்றன. எரிவாயு, மண்ணெண்ணெய் போன்ற வசதிகள் எல்லாம் இல்லை. அடுப்புக்கு கரியைத்தான் பயன்படுத்தினோம்.
வீடுகளில் ஃபேன், தொலைபேசி வசதியெல்லாம் அதிசயமானதாகவே பார்க்கப்பட்டது. எனினும், உணவு, உடை விஷயத்தில் அன்றைக்கு இருந்த செறிவுமிகுந்த கலாசாரம் இன்றைக்கு இல்லை. பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதும் குறைந்துவிட்டது. இதுதான் மனத்தை வருத்துகிறது. மற்றபடி வசதிகளைப் பார்க்கும்போது அன்றைக்குவிட இன்றைக்கு அதிகம்தான்'' என்கிறார் விஜயலட்சுமி பட்டாபிராமன்.