அப்போதெல்லாம் ஊழல் இல்லை
50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது. இந்த வாரம்"அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் தில்லிவாழ் மூத்த தமிழர்களில் ஒருவரான எஸ். சுப்பிரமணியம் (88). எங்கள
50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது.
இந்த வாரம்"அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் தில்லிவாழ் மூத்த தமிழர்களில் ஒருவரான எஸ். சுப்பிரமணியம் (88).
எங்களது ஐந்து தலைமுறைக்கு முற்பட்ட மூதாதையர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் விவசாயம் செய்வதற்காக திருச்சி- குளித்தலை வழித்தடத்தில் குமாரவயலூர் அருகே உள்ள சோமேஸ்வரம்பேட்டைக்கு வந்தனர். என் தந்தை பெயர் சதாசிவம். அதனால், என் முழுப் பெயர் கூட சோமேஸ்வரம்பேட்டை சதாசிவம் சுப்பிரமணியம் (88) என்பதுதான்.
1943-ம் ஆண்டில் எனது 19-ம் வயதில் மத்திய அரசின் பொதுப்பணித் துறையில் வேலை கிடைத்தது. பணிக்காக, சென்னையில் இருந்து 1947-ம் ஆண்டு மார்ச் மாதம் தில்லிக்கு வந்தேன். கிராண்ட் டிரங்க் (ஜிடி) ரயிலில்தான் வந்தேன்.
அப்போது, சென்னையில் இருந்து தில்லிக்கு இயக்கப்பட்ட ஒரே ரயில் அதுதான். ஏ.சி. வசதி எல்லாம் அப்போது இல்லை. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் உண்டு. தில்லி வந்தடைய இரண்டு இரவுகள் ஒன்றரை நாள் பகல் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அமைதியான, ஆரவாரமற்ற நகரமாகத் தில்லி காணப்பட்டது.
1947-ம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தில்லி கரோல் பாகில் உள்ள தேவ்நகர், மேற்கு விரிவாக்கப் பகுதி, பூசா ரோடு உள்ளிட்ட பகுதிகளில்தான் தமிழர்கள், மலையாளிகள் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் பரவலாக வசித்தனர். சுமார் 100 முதல் 200 குடும்பங்கள்தான் அப்போது குடியிருந்தன. இங்குள்ள நடைபாதை ஓரங்களில் சிறுதொழில் செய்து கீழ்த்தட்டு தென்னிந்திய மக்கள் பிழைப்பு நடத்தினர்.
1956-ம் ஆண்டு வரை மத்திய பொதுப்பணித் துறையில் வேலை செய்தேன். அதன் பிறகு நிதி அமைச்சகத்துக்கு மாறி 1983-ம் ஆண்டில் ஓய்வுபெற்றேன்.
தொடக்கத்தில் நான் தில்லி வந்தபோது தங்குவதற்கு வீடு ஏதும் இல்லை. இதனால், கனாட் பிளேஸில் இருந்த எங்கள் அலுவலகத்தின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் வேய்ந்த அறையில்தான் (தற்போதைய ஜீவன் பார்தி பில்டிங்) நான் உள்பட சிலர் தங்கினோம். பின்னர், மெட்ராஸ் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது, எனது மாதச் சம்பளம் ரூ. 60 தான்.
பின்னர் கரோல் பாகில் வசித்தேன். அங்குள்ள நடராஜன் மெஸ்ஸில்தான் சாப்பாடு. இரவில் மட்டும் தென்னிந்திய உணவு கிடைக்கும்.
அரசு அலுவலகங்களில் வேலைகள் அனைத்தும் நியாயமாகவே நடந்தன. ஊழல்கள் எல்லாம் பெரிய அளவில் இல்லை. எனது மேலதிகாரியாக இருந்த ஏ.டபிள்யூ.எச். டீன் மிகவும் கண்டிப்பானவர். முக்கியத் துறைகளின் உயர் அதிகாரிகள் எல்லாம் ஆங்கிலேயர்களாகவே பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.
1947-ம் ஆண்டில் நடந்த ஹிந்து - முஸ்லிம் கலவரம் தில்லி மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம். அப்போதெல்லாம் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாத நிலை. இரண்டு, மூன்று நாள்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல்.
கரோல் பாக், தர்யா கஞ்ச் பகுதியில் உள்ள சப்ஜி மண்டி, பஞ்ச் க்யூன் ரோடு, பாதர் கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அந்த நாள்களை இப்போது நினைத்தாலும் மனம் வேதனைப்படுகிறது.
மற்றொரு விஷயம். ரீடிங் ரோடு பகுதியில்தான் முதல் முதலாக மெட்ராஸ் ஸ்கூல் உருவாக்கப்பட்டது. அங்கு தமிழ்வழியில் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
அதன் பிறகுதான் பூசா ரோடு, லோதி ரோடு உள்ளிட்ட இடங்களிலும் தமிழ்வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
சுதந்திரக் காலக்கட்டத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் நடுத்தர நிலைமையில்தான் இருந்தது. தில்லியில் மார்வாடி இன மக்கள் துணிக்கடை, பலசரக்குக் கடை, நகைக் கடைகள் வைத்திருந்தனர். அவர்கள்தான் வசதியுள்ளவர்களாகக் கருதப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகள் இரண்டு மட்டுமே இருந்தன. ஒன்று வெலிங்டன் மருத்துவமனை (தற்போதைய ராம் மனோகர் லோகியா மருத்துவமனை), மற்றொன்று இர்வின் மருத்துவமனை (தற்போதைய லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை).
கோல் மார்க்கெட் பகுதியில் கோபால்சாமி என்கிற தமிழர் கிளினிக் நடத்தி வந்தார். அவரிடம் தமிழர்கள் பலரும் சிகிச்சைக்குச் சென்றுவருவோம்.
தில்லியில் சுற்றுலா இடமாக பிர்லா மந்திர் இருந்தது. தவிர, செங்கோட்டை, குதுப் மினார், தேசிய உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குப் பொதுமக்கள் பொழுதுபோக்கவும், சுற்றுலாவாகவும் அதிக அளவில் வருவர். சாந்தினி சௌக் பகுதியில் பழைமையான பொருள்களும், பேன்ஸி வகை பொருள்களும் விற்கப்படுவதுண்டு.
ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்டேட்ஸ்மென் போன்ற ஆங்கில நாளிதழ்கள் விற்பனையில் இருந்தன.
பெரும்பாலும் சினிமாதான் அப்போது பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் எல்லாம் அப்போது இல்லை. தேவ் ஆனந்த், ராஜ்கபூர், மாலா சின்ஹா, அசோக்குமார் ஆகியோர் நடித்த ஹிந்திப் படங்கள் பிரபலம்.
தமிழ் சினிமா, பிளாசா தியேட்டரில் எப்போதாவது திரையிடுவார்கள். சில சமயங்களில் ஓடியன் திரையரங்கிலும் தமிழ்ப் படங்கள் போடுவார்கள்.
பெரும்பாலான மக்களுக்கு ரேடியோதான் மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. வாரம்தோறும் சனிக்கிழமை பாட்டுக் கச்சேரி ஒலிபரப்பப்படும்.
குளிர்காலம் நவம்பர் மத்தியில் தொடங்கி மார்ச் மத்தி வரை நீடிக்கும். பெரிய கட்டடங்களோ, தளங்களோ அப்போது இல்லாததால் குளிர் அதிகமாகவே இருந்தது.
உடை விஷயத்தில் தற்போதுள்ள ஃபேஷன் ஆடைகள் எல்லாம் அப்போது இல்லை. பைஜாமா, பேண்ட், சட்டை, சல்வார் கமீஸ் போன்றவைதான் புழக்கத்தில் இருந்தன.
ஆங்கிலேய அரசில் வேலைக்கு ஆள்கள் எடுப்பது குறைவாகத்தான் இருந்தது. ராணுவம், கப்பல் படை ஆகியவற்றுக்குத்தான் அதிக ஆள்கள் எடுக்கப்பட்டனர். தற்போதுள்ள யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்று அப்போது, "ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என்ற பெயரில் இருந்தது.
வேளாண்மையில், கரும்பு, கோதுமை சாகுபடி அதிகம் இருந்தது. தானியங்களும் விளைவிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெற்றது.
தீபாவளி, நவராத்திரிப் பண்டிகைகள் மிக விசேஷமாகக் கொண்டாடப்பட்டன. ராம் லீலா மைதானத்தில் நவராத்திரிப் பண்டிகை நடைபெறும்.
தவிர கார்த்திகைப் பூர்ணிமா, சிவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் விசேஷமாக நடைபெற்றன. ஹரித்துவார், ரிஷிகேஷ், அலாகாபாத் உள்ளிட்ட இடங்களில் கும்பமேளா, கார்த்திகைப் பூர்ணிமாவும், பனாரசில் சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும்.
1954-ம் ஆண்டில் ராமச்சந்திரன் என்பவர் ஆர்.கே. புரத்தில் இருந்துகொண்டு வீட்டு சுபகாரியங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்துவந்தார். தமிழர்களும் மற்ற மாநில மக்களும் அவரது கேட்டரிங் சர்வீûஸ மிகவும் விரும்பினர்.
அக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் ஒத்துழைப்பும், உதவும் மனப்பான்மையும் அதிகமாகவே இருந்தன. தற்போது அது போன்று இல்லை.
நாங்கள் பார்த்த தில்லி மிகவும் அமைதியான ஊர். பிறருக்கு உதவிடும் மனப்பான்மையுள்ள மக்கள் உள்ள ஊர். இனம், மதம், மொழி மாறுபட்ட மக்கள் வாழும் இந்த நகரம், மனித மனங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் ஓர் சமத்துவ நகரம் என்றே கூறலாம்.
தில்லி பழமையான நகரம் மட்டுமல்ல. பல்வகை கலாசாரம், இனங்கள் கொண்ட ஊர். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தில்லி வளர்ந்துவரும் நகரமாகவும், மாற்றங்களை எதிர்கொண்டு வரவேற்கும் நகரமாகவும் மிளிர்கிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கு உகந்த நகரம் இல்லை என்றாலும் அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள வசதியான நகரம்.
அன்றைக்குத் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. மாசும் இல்லை. இப்போது அதுபோன்ற நிலை இல்லை. பொது சுகாதாரம் குறைவாகவே உள்ளது'' என்கிறார் சுப்பிரமணியம்.