முகப்பு
புதுதில்லி

விக்டோரியா மகாராணியின் நினைவு தினம் அனுசரிப்பு

விக்டோரியா மகாராணியின் நினைவு தினம் தில்லி ஐந்தர் மந்தரில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி 2019, 6:10 am IST
பகிர்:

விக்டோரியா மகாராணியின் நினைவு தினம் தில்லி ஐந்தர் மந்தரில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பிரிட்டன், இந்தியப் பேரரசின் அரசியாக இருந்தவர் மகாராணி விக்டோரியா. 64 ஆண்டுகள் பிரிட்டனை ஆண்ட இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவை தனது ஆளுகையின் கீழ் பிரிட்டன் கொண்டு வந்தது. 1901, ஜனவரி 22-ஆம் தேதி தனது 81-ஆவது வயதில் அவர் காலமானார். இந்நிலையில், அவரது 118-ஆவது நினைவு தினம் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஹிந்து சேனா அமைப்பால் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
இது தொடர்பாக ஹிந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா கூறியதாவது: இந்தியாவை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்து இந்தியாவை 1857-இல் விக்டோரியா மகாராணி மீட்டார். அந்த வகையில், இந்தியாவுக்கான முதலாவது சுதந்திரத்தை அவர்தான் பெற்றுக் கொடுத்தார். 
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆட்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்றது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் தடை செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. நாடாளுமன்றம் கட்டப்பட்டது. ரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான சிறிய ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இன்றைய இந்தியாவை உருவாக்கியவர்களும் அவர்களே.
இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் இருந்து விக்டோரியா மகாராணி கைப்பற்றியிருக்காவிட்டால், இந்தியா ஒட்டுமொத்தமாக முஸ்லிம் நாடாக மாறியிருக்கும். 
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் சொத்துகளைக் கொள்ளை அடித்தார்களே என்று கேட்கிறீர்கள். அவர்கள் சொத்துகளை கொள்ளை அடித்திருந்தாலும், இந்தியாவின் மேம்பாட்டுக்காக ஆங்கிலேயர்கள் நிறையப் பணிகளைச் செய்தார்கள் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.