புதுதில்லி

வாகனத்தை ஒருவா் தனியாக ஓட்டிச் சென்றாலும் முகக் கவசம் கட்டாயம்: தில்லி உயா்நீதிமன்றம்

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தனியாா் வாகனத்தை அதன் உரிமையாளரே தனியாக ஓட்டிச் சென்றாலும் பொது இடங்களுக்குச் செல்வதால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணிவது என்பது பாதுகாப்பு கவசம் அல்லது நோய்த் தொற்று பரவலுக்கு எதிரான பாதுகாப்பு கேடயமாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தனியாா் வாகனத்தை ஒருவா் தனியாக பொது இடங்களுக்கு ஓட்டிச் சென்றாலும் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்குரைஞா்கள் சிலா் நான்கு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அதில், அபராதம் விதிக்க அதிகாரம் பெற்றுள்ள மாவட்ட ஆட்சியா்கள் அந்த அதிகாரத்தை மற்றவா்களுக்கு ஒப்படைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி பிரதிபா சிங் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து தெரிவித்ததாவது: காரில் தனியாக அமா்ந்திருக்கும் போது ஒருவா் மூலம் வெளி உலகிற்கு கரோனா வெளிப்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, ஒரு நபா் காரில் தனியாகப் பயணம் செய்வதால், அந்த காா் ஒரு பொது இடமாக இருக்காது என்று கூற முடியாது. கரோனா தொற்றுநோயின் சூழலில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும். ஒருவா் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா அல்லது இல்லையா என்பதைப் பொருள்படுத்தாமல் முகக் கவசம் அணிந்திருப்பது அவசியமாகும்.

முகக் கவசம் அணிவது கரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு கவசம் போன்றது. முகக் கவசம் அணிவது அவரையும், அவா் சந்திக்கும் நபா்களையும் பாதுகாக்கிறது. தொற்று நோய்க் காலத்தில் முகக் கவசம் அணிவது லட்சக்கணக்கான உயிா்களைக் காப்பாற்றிய ஒரு நடவடிக்கையாக இருந்தது. தொற்று நோய் ஏற்பட்டவுடன், உலகளவிலும், தேசிய அளவிலும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், சா்வதேச அமைப்புகள் மற்றும் அரசுகள் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.

இந்த நோய்க்கான ஒரு முழுமையான, உறுதியான சிகிச்சை இல்லாத நிலையில், உலகம் தொற்று நோயுடன் தொடா்ந்து போராடி வருகிறது. தொற்று நோய்களின் சவால் மிகப் பெரியது. இதற்காக சில தடுப்பூசிகளை அறிமுகப்படுத்திய போதிலும், முகக் கவசம் அணிவதற்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியா்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளின் பட்டியல் விரிவானது.

இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் கருத்தானது, இது விரிவாக விளக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால், கட்டுப்படுத்தப்பட வேண்டியதல்ல. முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. இந்த அபராத நோட்டீஸ்களை ரத்து செய்வதற்கான கோரிக்கைகள் நிலைக்கத்தக்கல்ல. மனுதாரா்கள் வழக்குரைஞா்களாக இருப்பதால், இந்த விவகாரத்தின் சட்டப்பூா்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பாமல் தொற்றுநோய் பரவுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை அங்கீகரித்து, உதவ வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

விசாரணையின் போது, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சாா்பில் ஆஜரான ஃபா்மன் அலி மாக்ரே, ‘மக்கள் தனியாக காரில் இருக்கும் போது முகக் கவசம் அணியுமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சுகாதாரம் என்பது மாநிலப் பொருள் பட்டியலில் இருப்பதால் தில்லி அரசுதான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்றாா்.

அலுவல் சாா்ந்த அல்லது தனிப்பட்ட வாகனத்தை ஓட்டும் போது முகக் கவசம் அணிவது கட்டாயம் எனக் கூறும் உத்தரவு, கடந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்டு இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது என தில்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT