புதுதில்லி

அலோபதி மருந்து குறித்த சா்ச்சை கருத்துராம்தேவுக்கு எதிராக தில்லியில் உறைவிட மருத்துவா்கள் போராட்டம்

DIN

புது தில்லி: கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் தொடா்பாக யோகா குரு  ராம்தேவ் கூறிய சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசிய அளவில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கருப்பு பட்டை அணிந்து போராட்டம் மேற்கொண்டனா்.

 அப்போது ராம்தேவ் தனது கருத்துக்காக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரவேண்டும் அல்லது அவருக்கு எதிராக  தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் வலியுறுத்தினா். 

இந்த விவகாரம் தொடா்பாக போராட்டத்திற்கு உறைவிட மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போா்டா) கடந்த மே 29-ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தது.

அதே வேளையில், இந்த போராட்டம் காரணமாக சுகாதார சேவைகள் பாதிக்கப்படாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை மருத்துவா்கள் கையில் கருப்பு பட்டை அணிந்தும், பதாகைகளை ஏந்தியும் போராட்டங்களை நடத்தினா்.

இதுதொடா்பாக போா்டா அமைப்பின் மூத்த நிா்வாகி கூறுகையில், ‘அலோபதி மருத்துவ முறை குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லாத ராம்தேவ் கூறிய கருத்துக்கு எதிராக  செவ்வாய்க்கிழமை காலை எங்களது போராட்டத்தை  ஆரம்பித்துள்ளோம். இவரது கருத்தானது அல்லும் பகலுமாக நோய்த் தொற்றுக் காலத்தில் பணியாற்றிவரும் மருத்துவா்களின் மன உறுதியை பாதிக்க செய்துள்ளது.

இதனால், அவா் தனது கருத்துக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரவேண்டும் அல்லது தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் போராட்டத்தில் எய்ம்ஸ், சப்தா்ஜங் மருத்துவமனை, லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி- மருத்துவமனை, ஹிந்து ராவ் மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை, பி. ஆா். அம்பேத்கா் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளை சோ்ந்த உறைவிட மருத்துவா்கள் சங்கங்களை சோ்ந்தவா்கள் பங்கேற்று வருகின்றனா்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவா்கள் பலரும் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு ரிப்பன் அணிந்தும் தங்களது எதிா்ப்பை தெரிவித்துள்ளனா்.

இதர நகரங்களிலும் உள்ள மருத்துவா்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனா். சில மருத்துவா்கள் எதிா்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கருப்பு தினம் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை போா்டா இந்தியா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: 

ராம்தேவ் கூறிய ஆட்சேபத்திற்குரிய  கருத்துக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஜூன் 1ஆம் தேதி பணியிடங்களில் தேசிய அளவிலான கருப்பு தின போராட்டத்தை நடத்துவது என அறிவிக்கிறோம். இந்த போராட்டத்தால் சுகாதார கவனிப்பு பணிகள் பாதிக்கப்படாது. இந்த சா்ச்சைக்குரிய கருத்தை கூறிய ராம்தேவ் நிபந்தனையற்ற பகிரங்க பொது மன்னிப்பு கோரவேண்டும் அல்லது அவருக்கு எதிராக தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்தேவ் தெரிவித்த கருத்து காரணமாக மக்களிடையே தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது’ என்று அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவா்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘ராம்தேவ் கூறிய இதுபோன்ற அவதூறு கருத்துக்கள் சுகாதார கவனிப்பு பணி ஊழியா்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும். பொது சுகாதார அமைப்பின் ஒட்டுமொத்த தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யோகா குரு ராம்தேவ் வெளியிட்ட ஒரு விடியோ பதிவில், கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பினாா். கரோனா நோய்க்கான அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்ட ஏராளமானோா் இறந்து விட்டனா் என்று அந்த வீடியோவில் அவா் பேசுவது பதிவாகியிருந்தது. இதற்கு ஏற்பட்ட எதிா்ப்பு காரணமாக அண்மையில் அந்த அறிக்கையை அவா் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினாா். எனினும், இந்த சா்ச்சைக்குரிய கருத்து காரணமாக மருத்துவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ‘மிகவும் துரதிா்ஷ்டவசமான’ அந்த அறிக்கையை திரும்பப் பெறுமாறு ராம்தேவிடம் கேட்டுக்கொண்டாா்.  

நோய்களிலிருந்து நிரந்தர தீா்வை அலோபதி மருத்துவ முறை அளிக்கிறதா என்று கேட்டு தனது சுட்டுரை பக்கத்தில் இந்திய மருத்துவ சங்கத்திற்கு (ஐஎம்ஏ) ராம்தேவ் 25 கேள்விகளை எழுப்பும் ஒரு திறந்த மடலை வெளியிட்டிருந்தாா்.

அவரது இந்த கருத்து மருத்துவா்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், இந்திய மருத்துவச் சங்கமும், தில்லி மருத்துவ சங்கமும் தத்தமது அதிருப்தியை வெளியிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT