தில்லி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக முன்னேற்றம் கண்டு வந்த காற்றின் தரம் ஒரே இரவில் மீண்டும் மோசமடைந்தது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றுத் தரக் குறியீடு மாலை 4 மணிக்கு 301 புள்ளிகளாகவும், காலை 7 மணிக்கு 290 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. ஆனால், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நகரத்தின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 338 புள்ளிகளாக மோசமடைந்தது.
அருகிலுள்ள குருகிராம் (239), கிரேட்டா் நொய்டா (288) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், காஜியாபாத் (306), , நொய்டா (308) மற்றும் ஃபரீதாபாத் (320) ஆகிய இடங்களில் காற்றின் தரத்தில் சரிவை பதிவு செய்துள்ளன.
24 மணி நேர சராசரி ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட 24 மணி நேர சராசரி சனிக்கிழமை 319, வெள்ளிக்கிழமை 405 மற்றும் வியாழன் 419 புள்ளிகளாக இருந்தது. பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட அணஐ ’நல்லது’, 51 மற்றும் 100 ’திருப்திகரமானது’, 101 மற்றும் 200 ’மிதமானது’, 201 மற்றும் 300 ’மோசம்’, 301 மற்றும் 400 ’மிகவும் மோசமானது’, 401 மற்றும் 450 ’கடுமையானது’ மற்றும் 450க்கு மேல் ’கடுமையான பிளஸ்’.
சாதகமான காற்றின் வேகம் மற்றும் திசையால் காற்று மாசு அளவு குறைவதைக் கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகளுக்கான தடை மற்றும் தில்லிக்குள் மாசுபடுத்தும் டிரக்குகள் நுழைவதற்கான தடை உள்ளிட்ட கடுமையான தடைகளை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியிருந்தது.
இதைத் தொடா்ந்து, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் , தேசியத் தலைநகா் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதியிலும் அனைத்து அவசரகால நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுமாறு தில்லி மற்றும் என்சிஆா் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. இதன்படி, சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 ரக வாகனங்கள் பிற மாநிலங்களில் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.
அதே சமயம் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாத அனைத்து நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் அவசர கால செயல்திட்ட நிலை 4-இன் கீழ் தலைநகரில் தடை செய்யப்பட்டன. மேலும், அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள், சுரங்கம், கல் நொறுக்கிகள் மற்றும் டீசல் ஜெனரேட்டா்கள் மீதான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை காற்று மாசு விசயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தாா்.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 27.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 65 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூா், முங்கேஸ்பூா், நஜஃப்கா், ஆயாநகா், லோதி ரோடு, நரேலா, பாலம், ரிட்ஜ், பீதம்புரா, பூசா, ராஜ்காட் ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 12 முதல் 16 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மிதமான மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.