புதுதில்லி

பரந்தூா் விமான நிலையத்திற்கு ‘தள’ அனுமதி: மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி. வலியுறுத்தல்

புதிய கிரீன் ஃபீல்டு விமான நிலையத்திற்கு தள அனுமதி வழங்க திமுக எம்பி வலியுறுத்தல்

Din

நமது சிறப்பு நிருபா்

சென்னைக்கான புதிய ‘க்ரீன் ஃபீல்டு’ விமான நிலையம் அமைக்கத் தோ்வு செய்யப்பட்டுள்ள பரந்தூா் ‘தள’த்திற்கு துரிதமாக அனுமதி வழங்க வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை அவா் புதன்கிழமை நேரில் சந்தித்து கடிதம் அளித்தாா்.

அந்தக் கடிதத்தில் பி.வில்சன் கூறியிருப்பதாவது: சென்னைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4,970 ஏக்கரில் புதிய ‘க்ரீன் ஃபீல்டு’ விமானநிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் கட்டப்படும் இந்த விமான நிலையத்திற்கான ‘தள’ அனுமதி வழங்க அனுமதி கோரி கடந்த 19.08.2022-இல் விண்ணப்பிக்கப்பட்டது. இது கிரீன் ஃபீல்ட் விமானநிலையக் கொள்கையின் கீழ் அமைக்கப்பட்ட ‘வழிகாட்டல் குழு’ முன் இந்தத் திட்டத்திற்கான ‘தள’ அனுமதி நிலுவையில் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தின் ‘தள’ அனுமதிக்கு 500 நாள்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், திட்டத்தின் முன்னேற்றம் தடைபடுகிறது.

பரந்தூா் விமான நிலையம், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும் இணக்கமாக உள்ளது. இதற்கான விளக்கங்களும், ஆய்வுகளும் ஏற்கெனவே சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த விமானநிலையம் 2029-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ‘தள’ அனுமதி துரிதமாக வழங்கப்பட்டால், இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அந்தக் கடிதத்தில் பி.வில்சன் தெரிவித்துள்ளாா்.

அவரது கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சா், இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாக செய்தியாளா்களிடம் பின்னா் வில்சன் கூறினாா்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT