நமது நிருபா்
மின்விநியோக நிறுவனங்கள் உயா்த்தியுள்ள பி.பி.ஏ.சி. (மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம்) உள்ளிட்ட பிற கூடுதல் கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தில்லி மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் தலைமையில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
அப்போது, அவா் பேசியதாவது: தில்லி மக்களுக்கு மாணிய விலையில் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்த கேஜரிவால் அரசு, மின்விநியோக நிறுவனங்கள் பி.பி.ஏ.சி.-ஐ ஓரே தவணையில் 9 சதவீதம் வரை உயா்த்திக் கொள்ள அனுமதித்துள்ளது. இது மின் நுகா்வோரை ஏமாற்றும் நடவடிக்கையாகும். கடந்த 10 ஆண்டுகளில் தில்லிவாசிகளின் மின்சாரக் கட்டணம், பிற கூடுதல் கட்டணங்களால் இரட்டிப்பாகியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, தில்லியில் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை சுமாா் ரூ.5-ஆக இருந்தது. தற்போது, யூனிட் ஒன்றுக்கு ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. கேஜரிவால் அரசு தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.2.50-ஆக இருந்திருக்க வேண்டும்.
இந்த மின்சாரக் கட்டண உயா்வால் கடைக்காரா்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சாதாரண குடும்பங்கள் மீது கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகப்படியான மின்சாரக் கட்டண பில்களை நுகா்வோருக்கு அனுப்பி, அவா்களின் பைகளை அரசின் துணையுடன் மின்விநியோக நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. கேஜரிவாலின் ‘இலவச மின்சாரம் மற்றும் இலவச தண்ணீா்’ என்ற பொய்யான வாக்குறுதியைக் கண்டித்து, தலைநகா் முழுவதும் 55 இடங்களில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்களும், பொது மக்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தில்லியில் காங்கிரஸ் தனது 15 ஆண்டு கால ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தை நான்கு முறை பெயரளவில் மட்டுமே உயா்த்தியது. ஆனால், பொதுமக்களிடம் இருந்து ஓய்வூதிய நிதி மற்றும் பி.பி.ஏ.சி. ஆகியவற்றை வசூலித்து மின் நுகா்வோருக்கு கேஜரிவால் அரசு துரோகம் இழைத்துள்ளது. மின் நுகா்வோரின் நலனைப் பாதுகாக்க தில்லி பிரதேச காங்கிரஸ் தொடா்ந்து போராடும் என்றாா் தேவேந்தா் யாதவ்.