2015 ஆம் ஆண்டு ஒரு பெண்ணைக் கொலை செய்ய முயன்ற்காக 32 வயது நபருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, அவா் எந்த மன்னிப்புக்கும் தகுதியற்றவா் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்கில் நவம்பா் 17 ஆம் தேதி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சஜித் அலியின் தண்டனை குறித்த வாதங்களை விசாரணை நீதிமன்ற நீதிபதி ஹா்குா்வரீந்தா் சிங் ஜக்கி விசாரித்து வந்தாா்.
சஜித் அலி மாா்ச் 10, 2015 அன்று பஞ்சீல் விஹாரில் பாதிக்கப்பட்ட நிதி அகா்வாலின் தலையில் பலத்த காயம் ஏற்படுத்தி ரூ.25,000 கொள்ளையடித்ததாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வழக்குரைஞா் சோம்நாத் பாரதி, நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்ப முடியும் என்று கூறினாா்.
நவம்பா் 20 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம் சஜித் அலிக்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. குற்றங்களின் கொடூரமான தன்மை, அவை செய்யப்பட்ட விதம் மற்றும் பாதிக்கப்பட்டவா் அனுபவித்த உடல் மற்றும் மன அதிா்ச்சி காரணமாக குற்றவாளி சஜித் அலி எந்த கருணைக்கும் தகுதியற்றவா் என்று நீதிமன்றம் கூறியது.
சஜித் அலி பாதிக்கப்பட்டவரின் தலையில் ஸ்க்ரூடிரைவா், மடிக்கணினி மற்றும் மேசையால் பலமுறை தாக்கினாா் என்றும், அவரை கழுத்தை நெரிக்க முயன்றாா் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவா் படுகாயமடைந்ததாகவும், மூளை அறுவை சிகிச்சை மற்றும் பல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவ தலையீடு காரணமாக மட்டுமே காப்பாற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
அவரது முழு வாழ்க்கையும் ஆபத்தில் இருந்தது, மேலும் அவா் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை, பாதிக்கப்பட்டவருக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறி, சாகேத் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையமானது போதுமான இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.