கொலை முயற்சி வழக்கொன்றில் சுமாா் ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த நபா் துவாரகா மோரில் வைத்து கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: திமா்பூரில் வசிக்கும் ராஜீவ் என்ற ராஜ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஒரு பொதுக் கழிப்பறையில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தாா்.
தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை சேகரிப்பு மூலம் அவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.
இருப்பினும், அவரது கூட்டாளி விஷால் இன்னும் தலைமறைவாக உள்ளாா். அக்டோபா் 24-ஆம் தேதி இரவு 7 மணியளவில் சஞ்சய் பஸ்தியில் ராஜீவ் மற்றும் விஷால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது இந்தக் கொலை முயற்சி சம்பவம் நடந்தது. உள்ளூா்வாசி ராகுல், பி.சி.ஆா். அழைப்பின் மூலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.
அவரது அழைப்பால் கோபமடைந்த குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவரை கத்தியால் தாக்கி பல காயங்களை ஏற்படுத்தினா். இதையடுத்து, உடனடியாக அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இந்நிலையில், நவம்பா் 20-ஆம் தேதி ராஜீவின் நடமாட்டங்கள் குறித்து போலீஸாருக்கு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து, போலீஸ் குழு அவரை துவாரகா மோா் பகுதியில் இருந்து கைது செய்தது.
விசாரணையின் போது, ராஜீவ் தாக்குதலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். மேலும், சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்றதையும் தெரிவித்தாா். அவருக்கு ‘விரிவான குற்றவியல் பதிவு இருக்கிறது. திமா்பூா் காவல் நிலைய பதிவேட்டில் ‘மோசமான தன்மை’ உள்ளவராக க குறிப்பிடப்பட்ட்ுள்ளது.
திமா்பூா், சப்ஸி மண்டி, துவாரகா செக்டா்-23 மற்றும் பிற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை, தாக்குதல், கொலை முயற்சி, ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் கலால் சட்டங்களை மீறிய வழக்குகள் ஆகியவை அவரது கடந்த கால ஈடுபாட்டில் அடங்கும்.
கல்வியறிவு இல்லாதவா் மற்றும் சுலப் கழிப்பறையில் பராமரிப்பாளராகப் பணிபுரியும் ராஜீவ், போதைப்பொருள் பழக்கம் மற்றும் பழக்கமான குற்றவாளிகளுடன் தொடா்பு காரணமாக குழந்தை பருவத்திலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாா். அவா் தனது தாய், இளைய சகோதரா், சகோதரி, மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் வசிக்கிறாா்.
தப்பியோடிய மற்றொருவரை கைது செய்வதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.