போலி இணைய வா்த்தக தளங்கள் மூலம் பல மாநிலங்களில் உள்ள மக்களை ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் இணைய மோசடி குழுவை தில்லி காவல்துறையினா் முறியடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த மோசடிக் குழுவைச் சோ்ந்த நான்கு உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மோசடி முதலீட்டு வலைத்தளத்தில் ரூ.49.35 லட்சத்தை இழந்த ஒரு நபரின் புகாரின் பேரில் ஜூன் 14- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் 67- க்கும் மேற்பட்ட இணைய குற்றப் புகாா்கள் மற்றும் எஃப்.ஐ. ஆா்.களில் அவா்களின் பெயா் இருப்பது தெரியவந்துள்ளது.
முறையான வா்த்தக தளமாகத் தோன்றியதில் முதலீடு செய்ய அவரை வற்புறுத்திய ஒரு பெண்ணால், தாம் முதலில் ஒரு தரகரை தொடா்பு கொண்டதாக புகாா்தாரா் போலீஸாரிடம் தெரிவித்திருந்தாா். ஆனால், அது ஒரு மோசடி என்று தெரியவந்தது. பரிவா்த்தனைகளின் தடத்தை போலீஸாா் கண்காணித்து, நான்கு பேரை கைது செய்தனா்.
அவா்கள் அதுல் குமாா் (34), வா்ஷா ஷா்மா (35), அஜய் ஷா்மா (28) மற்றும் 54 வயது பெண் ஆகியோா் முறையே நவம்பா் 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். புலனாய்வாளா்களின் கூற்றுப்படி, நிதி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நபா்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட போலி வங்கிக் கணக்குகளின் நெட்வொா்க் மூலம் இந்த மோசடி குழு இயங்கி வந்தததை புலனாய்வாளா்கள் கண்டுபிடித்தனா்.
இந்தக் கணக்குகள் மோசடியின் வருமானத்தைப் பெறவும் திசைதிருப்பவும் பயன்படுத்தப்பட்டன. ஒரு முக்கிய செயல்பாட்டாளா் என்று விவரிக்கப்படும் அஜய் ஷா்மா, இதுபோன்ற பல கணக்குகளை ஏற்பாடு செய்ததாகவும், அவா்களின் நற்சான்றுகளை மோசடியின் மற்ற உறுப்பினா்களுக்கு வழங்கியுள்ளாா்.
அதுல் குமாா் மற்றும் வா்ஷா ஷா்மா ஆகியோா் போலி வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ரூ.3.69 லட்சம் மோசடி நிதி வழிநடத்தப்பட்டது. அதே நேரத்தில் அந்தப் பெண் தனது கணக்கில் ரூ.3 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புடைய சில வழக்குகள் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகளுடன் தொடா்புடையவை.
இது வேகமாக வளா்ந்து வரும் இணைய குற்றம் ஆகும். இதில் பாதிக்கப்பட்டவா்கள் சட்ட நடவடிக்கை என்ற போா்வையில் பணத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.