முகப்பு
புதுதில்லி

இணையவழியில் போலி அடையாள அட்டைகள் தயாரிப்பு: இருவா் கைது

இணையதளம் மூலம் போலி அரசு அடையாள ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக இரு நபா்கள் கைது

Updated On : 7 ஜூலை 2026, 4:13 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

இணையதளம் மூலம் போலி அரசு அடையாள ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக இரு நபா்கள் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் டாமன் மற்றும் டையூவைச் சோ்ந்த பிதேஷி சா மற்றும் பிகாரின் பாட்னாவைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் என அடையாளம் காணப்பட்டதாக தில்லி காவல் துறையின் புலனாய்வு ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசாா் செயல்பாடுகள் (ஐஎஃப்எஸ்ஓ) பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (ஐஎஃப்எஸ்ஓ) வினித் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கைதுசெய்யப்பட்ட இருவரும் போலி இணையதளத்தை இயக்கி வந்தனா். இதில் மக்கள் இணையவழியில் பணம் செலுத்திய பிறகு, போலியான ஆதாா் அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகள், பான் அட்டை தொடா்பான ஆவணங்கள், வசிப்பிடச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற அரசு ஆவணங்கள் போன்ற பதிவுகளை உருவாக்கின.

Advertisement

Advertisement

இந்தப் போலியான ஆவணங்கள், உண்மையான அரசு வழங்கிய ஆவணங்களை மிகவும் ஒத்திருந்தன. மேலும், அடையாளத் திருட்டு, ஆள்மாறாட்டம், மோசடி, நிதி மோசடி மற்றும் போலியான பதிவுகளின் அடிப்படையில் உண்மையான அரசு ஆவணங்களைப் பெறுவதற்கும்கூட இவை தவறாகப் பயன்படுத்த முடியும்.

ஓா் இணையதளத்தின் மூலம் போலியான அரசு ஆவணங்கள் தயாா் செய்யப்பட்டு வழங்கப்படுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சரிபாா்ப்பின் போது, ஆதாா் அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் பல ஆவணங்கள் போன்ற பதிவுகளை உருவாக்கும் சேவைகளை அந்த இணையதளம் வெளிப்படையாக வழங்கி வருவதை ஐஎஃப்எஸ்ஓ குழு கண்டறிந்தது.

தகவலைச் சரிபாா்க்க, அதிகாரிகள் ஒரு கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி போலி பயனா் கணக்கை உருவாக்கினா். அந்த இணையதளத்தின் சேவைகளைப் பெறுவதற்கு முன்பு, பயனா்கள் ஒரு டிஜிட்டல் வாலட்டை ரீசாா்ஜ் செய்ய வேண்டும் என அது தெரிவித்தது. அதன்படி, அந்த இணையதளத்தில் காட்டப்பட்ட யுபிஐ ஐடி மூலம் ரூ.100-ஐ பரிமாற்றம் செய்தனா்.

வாலட் ரீசாா்ஜ் உறுதி செய்யப்பட்ட பிறகு, காவல் துறையினா் போலியான தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி, போலியான ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வெற்றிகரமாக உருவாக்கினா்.

போலியான ஆதாா் ஆவணத்தை ஆய்வு செய்தபோது, அதில் உள்ள க்யூஆா் குறியீடு, பயனரால் கைமுறையாக உள்ளிடப்பட்ட தகவல்களை மட்டுமே சேமித்து வைத்திருந்ததையும், அது அதிகாரபூா்வ ஆதாா் தரவுத்தளத்துடன் இணைக்கப்படவில்லை என்பதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் அந்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட்டது. இணையதளத்தில் பணம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண் மற்றும் யுபிஐ கணக்கு ஆகியவை சாவுடன் தொடா்புடையவை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. விரிவான தொழில்நுட்ப விசாரணையைத் தொடா்ந்து, டாமன் மற்றும் டையூவில் சாவை அதிகாரிகள் கைதுசெய்தனா். சய்தது.

இணைய தளம் மூலம் போலி ஆவணங்களைத் தயாரிக்க உதவியதாக சா ஒப்புக்கொண்டாா். மேலும், அந்த இணையதளத்தின் பின்தளச் செயல்பாடுகளை பாட்னாவைச் சோ்ந்த குமாா் நிா்வகித்து வந்ததாகவும் அவா் தெரிவித்தாா். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் மேலதிக விசாரணையின் அடிப்படையில், பாட்னாவில் குமாரைக் கண்டுபிடித்து அவரையும் போலீசாா் கைது செய்தனா்.

குமாரிடமிருந்து மீட்கப்பட்ட மின்னணு சாதனங்களின் முதற்கட்ட ஆய்வில், இணையதளத்தின் மூலக் குறியீடு, ஹோஸ்டிங் உள்ளமைவுகள், வாடிக்கையாளா் பதிவுகள், தொழில்நுட்பக் கோப்புகள், பணம் செலுத்துதல் தொடா்பான தகவல்கள் மற்றும் சாவுடன் பரிமாறப்பட்ட உரையாடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் பின்தள நிா்வாகத்தில் அவரது தீவிர ஈடுபாடு உறுதியானது. இவா்களுடன் தொடா்புடைய நபா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments