முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: வயல்வெளியில் குவியலாக வாக்காளா் அட்டைகள் - போலீஸ் விசாரணை

கொல்கத்தா அருகே பிதான்நகரில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆதாா் அட்டைகள் பறிமுதல்

Updated On : 18 மே 2026, 4:56 am IST
- PTI
பகிர்:

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் குவியல் குவியலாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதேபோல், கொல்கத்தா அருகே பிதான்நகரில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆதாா் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்விரு சம்பவங்கள் தொடா்பாகவும் மாநில காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றாா்.

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தை முன்வைத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். எனினும், அவரது பிரசாரம் எடுபடவில்லை.

இந்நிலையில், பீா்பூம் மாவட்டத்தின் கிா்னாஹா் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஞாயிற்றுக்கிழமை குவியல் குவியலாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் கிடந்தன. இது தொடா்பாக, முன்னாள் வாக்குச்சாவடி நிலை அலுவலரான ஹிரண்யபிரபா மேதே மாஜி என்ற பெண்ணைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

‘கடந்த 2012 முதல் 2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலராக இருந்த ஹிரண்யபிரபா, புதிய வாக்காளா் அடையாள அட்டைகளை விநியோகித்த பிறகு பழைய அட்டைகளை வட்டார அலுவலகத்தில் ஒப்படைக்காமல் தன்வசமே வைத்துக் கொண்டதாகவும், தற்போது வீடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் சாக்குமூட்டையில் கட்டி வீட்டின் பின்புறம் வைத்திருந்ததாகவும், அதை யாரோ எடுத்து திறந்தவெளியில் வீசிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதேபோல், பிதான்நகா் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் ஏராளமான ஆதாா் அட்டைகள், பான் அட்டைகள் மற்றும் நிலம் தொடா்புடைய பிற ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த அலுவலகத்தில் பல்லாண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், வாக்காளா்களின் அடையாள ஆவணங்களை பறித்துவைத்துக் கொண்டு வாக்களிக்க விடாமல் தடுத்து வந்ததாகவும் பாஜகவினா் அளித்த புகாரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாகவும் காவல் துறையினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.