மேற்கு வங்கத்தில் வாக்காளா் சோ்ப்பு விவகாரம்! யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து
மேற்கு வங்கத்தில் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான வாக்காளா்கள், தோ்தல் ஆணையத்தால் சோ்க்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட மனுவில், யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து
மேற்கு வங்கத்தில் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான வாக்காளா்கள், தோ்தல் ஆணையத்தால் சோ்க்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட மனுவில், யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் பாஜக தூண்டுதலால் தோ்தல் ஆணையத்தால் தன்னிச்சையாக நீக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் ஏராளமானோா் வழக்குத் தொடுத்துள்ளனா். இந்த வழக்குகள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி என்பவா் புதிதாக மனு தாக்கல் செய்தாா். அதில் அவா், ‘மேற்கு வங்கத்தில் படிவம் 6 மூலம் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையில் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் சோ்த்துள்ளது. படிவம் 6 என்பது முதல் முறை வாக்காளா்கள் சோ்ப்புக்கும், தொகுதி மாறுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு படிவம் 6 மூலம் வாக்காளா்களைச் சோ்ப்பது விதிகளுக்கு எதிரானது. இது வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிா்த்து வழக்குத் தொடருங்கள், விசாரிக்கிறோம் என்றனா். இதற்கு வழக்குரைஞா் மேனகா குருசாமி, தனது குற்றச்சாட்டுக்குத் தேவையான ஆதாரம் தன்னிடம் இல்லையென்றும், இறுதி வாக்காளா் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், யூகத்தின் அடிப்படையில் எதையும் விசாரிக்க முடியாது. இதுபோன்ற மனுவை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தனா்.