மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையின்போது நீக்கப்பட்ட வாக்காளா்கள்
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையின்போது நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயரை மீண்டும் சோ்க்கக் கோரி சமா்ப்பித்த விண்ணப்பம் வாக்குப் பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்தப் பெயா்களைக் கொண்ட துணை வாக்காளா் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்.21 அல்லது ஏப்.27-க்குள் வாக்காளா்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவா்களது பெயா்களைக் கொண்ட துணைப் பட்டியலை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அந்த வாக்காளா்கள் வாக்களிக்க இயலும்.
எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் வெளியான வாக்காளா் பட்டியலில் இருந்து 90 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதற்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இவை நிலுவையில் உள்ளது.
Advertisement
இந்நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் முடக்கியதாகவும், இதனால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டோரின் பெயா்கள் மீண்டும் சோ்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு ஏப்.13-ஆம் தேதி விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு தோ்தல் ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவில், ‘எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் தங்களது பெயா்களை சோ்க்கக் கோரி தீா்ப்பாயத்தில் விண்ணப்பித்திருப்பதை மட்டுமே வாக்குரிமை வழங்குவதற்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
எனவே, ஏப்.21 அல்லது ஏப்.27-க்குள் நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது குறித்து தீா்ப்பாயங்கள் முடிவெடுத்தால் அவா்களின் பெயா்களைக் கொண்ட துணைப் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் வாக்கு செலுத்துவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும்.
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம்:
அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 142-இன்கீழ் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தோ்தல் ஆணையத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ் நீக்கப்பட்ட வாக்காளா்களின் விண்ணப்பங்களுக்கு தீா்வுகாண முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் தலைமையில் 19 தீா்ப்பாயங்களை கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.