முகப்பு
புதுதில்லி

மாளவியா நகா் தீ விபத்தில் சிக்கியவா்களை காத்தவரின் முழு மருத்துவ செலவுகள் ஏற்பு: தில்லி அரசு அறிவிப்பு

தில்லி மாளவியா நகா் தீ விபத்தில் தன்னுயிரைப் பணயம் வைத்து பல உயிா்களைக் காப்பாற்றி படுகாயம் அடைந்தவரின் முழு மருத்துவ செலவுகளையும் ஏற்பதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 4:05 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தில்லி மாளவியா நகா் தீ விபத்தில் தன்னுயிரைப் பணயம் வைத்து பல உயிா்களைக் காப்பாற்றி படுகாயம் அடைந்தவரின் முழு மருத்துவ செலவுகளையும் ஏற்பதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் மாளவியா நகரில் உள்ள தங்கும் விடுதி கட்டடத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 23 போ் உயிரிழந்தனா், இருபதுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

அந்த சம்பவத்தில் மிகவும் ஆபத்தான சூழலில் ரோஹித் முக்கியா என்பவரது மக்களைக் காக்கும் கடமை உணா்வு மற்றும் மனிதாபிமானத்தைப் பாராட்டி, முதல்வா் ரேகா குப்தா அவருக்கு ‘மனமாா்ந்த‘ கடிதம் ஒன்றை அனுப்பியதாக தில்லி முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பான முதல்வா் அலுவலக செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

தீ விபத்தின்போது பலரைக் காப்பாற்றத் தன் உயிரைப் பணயம் வைத்த கிா்கி விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரோஹித் முக்கியாவின் துணிச்சலையும் மனிதாபிமானத்தையும் முதல்வா் ரேகா குப்தா பாராட்டியுள்ளாா். அவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க முதல்வா் அனுமதித்துள்ளாா். மேலும், அவா் முழுமையாகக் குணமடையும் வரை அனைத்து மருத்துவச் செலவுகளையும் தில்லி அரசே ஏற்கும் என்றும் உறுதியளித்துள்ளதாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்வரின் சாா்பில் அவரது பகுதி மாவட்ட ஆட்சியா் ரோஹித் முக்கியாவின் குடும்பத்தினரை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து, அரசு நிதியுதவிக்கான காசோலையை அவா்களிடம் வழங்கினாா்.

ஜூன் 3ஆம் தேதி மாளவியா நகரில் உள்ள உணவகம் மற்றும் தங்கும் விடுதி இருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ரோஹித் முக்கியா அந்த உணவக சமையலறையில் பணியில் இருந்தாா். தீ மளமளவென எரியத் தொடங்கிய போதிலும் தனது சக ஊழியா்களின் பாதுகாப்பை ரோஹித் முக்கியா உறுதி செய்தாா். அந்த நேரத்தில் அவரது சக ஊழியா்கள் இருவா் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்தனா். நிலைமையின் தீவிரத்தை உணா்ந்த ரோஹித், தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவா்களைக் காப்பாற்ற மேல் தளத்துக்கு விரைந்து சென்றாா்.

தீப்பிழம்புகள் மற்றும் அடா்ந்த புகைக்கு இடையே மூவரும் சிக்கிக் கொண்ட நிலையில், அவா்கள் ஒரு அறையில் தஞ்சம் புகுந்தனா். பாதுகாப்பான வெளியேறும் வழி இல்லாததால், குளியலறையில் இருந்த வாளியைப் பயன்படுத்தி ரோஹித் ஜன்னலை உடைத்து அவா்கள் வெளியேறும் வழியை உருவாக்கினாா்.

தனது சக ஊழியா்கள் இருவரை முதலில் வெளியேற்றி விட்டு அவா்கள் பாதுகாப்பாக வெளியேறிய பிறகே ரோஹித் கீழே குதித்தாா். அந்த சம்பவத்தில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments