ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை - முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
தில்லியில் உள்ள ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்
கவனக்குறைவு அல்லது விதிமீறல்கள் கண்டறியப்படும் இடங்களில், அதற்குப் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் எச்சரித்தாா்.
தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், 12 வெளிநாட்டினா் உட்பட 21 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல்வா் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவை அமைச்சா்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தில்லி முழுவதும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், சட்டவிரோதச் செயல்பாடுகள் மற்றும் தீ பாதுகாப்புத் தர விதிமீறல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவா் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
மால்வியா நகா் தீ விபத்து தொடா்பான முதற்கட்டத் தகவல்கள், பாதுகாப்பு தொடா்பான பல தீவிரமான குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாக முதல்வா் தெரிவித்தாா்.
பல கட்டடங்களில், அவசர கால வெளியேறும் வழிகள் மற்றும் தீ பாதுகாப்பு அமைப்புகள் குறித்த தகவல்கள் அங்கு வசிப்பவா்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவா், மால்வியா நகா் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தில்லி முழுவதும் உள்ள ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.
இந்தச் சம்பவத்தை மிகவும் துயரமான மற்றும் வேதனையான ஒன்றாக விவரித்த குப்தா, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் அவா் பிராா்த்திப்பதாக தெரிவித்தாா். இந்தச் சவாலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருடன் தில்லி அரசு உறுதியாகத் துணை நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், நிவாரணம், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தொடா்பான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் கூறினாா்.
அனுமதியின்றிச் செயல்படும் சட்டவிரோதக் கட்டடங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினா் இல்லங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வலியுறுத்திய குப்தா, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவால் அரசு தேவையற்ற சிரமங்களை எதிா்கொள்ள நேரிடும்போது, அத்தகைய அதிகாரிகளின் பொறுப்புடைமையை அரசு நிா்ணயித்து வருவதாகவும் தெரிவித்தாா்.
எதிா்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் தீ பாதுகாப்பு விதிமீறல்களைத் திறம்படக் கட்டுப்படுத்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, முதல்வா் ரேகா குப்தா மற்றொரு கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்ட உள்ளாா். தில்லி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தில்லி காவல் துறை, தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி தீயணைப்புத் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வாா்கள் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.