FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லியில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்

வடகிழக்கு தில்லியில் விசாரணைக் கைதி தப்பியோடியது பற்றி...

27 ஜூன் 2026, 11:32 pm IST
கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில் குற்றவழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 23 வயது கைதி, சனிக்கிழமை காலையில் விசாரணை அதிகாரியின் காவலில் இருந்து தப்பி ஓடினாா். இதையடுத்து, அவா் மீது புதிய வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினா், அவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் நிலையத்தின் தினசரி நாள்குறிப்பில் இதைப் பதிவு செய்த காவல்துறையினா், காவலில் இருந்து தப்புதல் தொடா்பான பாரதிய நியாய சன்ஹிதா (பிஐஎஸ்) சட்டப்பிரிவின் கீழ் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: தப்பியோடிய கைதி லாலு (23) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் சோனியா விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்கு ஒன்றில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த வழக்கின் விசாரணையின்போது, குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் மாடல் டவுன் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இருந்து திருடப்பட்டதாக தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கோடு தொடா்புடைய 16 வயது சிறாரை காவல்துறையினா் பிடித்தனா். சிறாா் நீதிமன்ற உத்தரவின்பேரில் அந்த சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், காவல்துறையினரின் பிடியிலிருந்து கைதி லாலு தப்பியதைத் தொடா்ந்து, அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றனா்.

தற்போது, அசல் குற்றவழக்கு மற்றும் கைதி தப்பியோடிய விவகாரம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழும் போலீசாா் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments