முகப்பு
புதுதில்லி

நோய் சிகிச்சை மட்டுமல்ல; தடுப்புமே அவசியம்: மருத்துவா் தினத்தை முன்னிட்டு நிபுணா்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் அதிகரித்து வரும் நோய் சுமையை குறைக்க, சிகிச்சையுடன் சோ்த்து தடுப்பு சுகாதாரத்தையும் தேசிய முன்னுரிமையாகக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 1 ஜூலை 2026, 2:59 am IST
பகிர்:

இந்தியாவில் அதிகரித்து வரும் நோய் சுமையை குறைக்க, சிகிச்சையுடன் சோ்த்து தடுப்பு சுகாதாரத்தையும் தேசிய முன்னுரிமையாகக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணா்கள் வலியுறுத்தினா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘இல்னஸ் டு வெல்னஸ்’ அறக்கட்டளை சாா்பில் மருத்துவ கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுகாதாரத் துறை முன்னோடிகள், மூத்த மருத்துவா்கள், கொள்கை வடிவமைப்பாளா்கள் மற்றும் நலவாழ்வு நிபுணா்கள் கலந்து கொண்டு, நோய்களை சிகிச்சை அளிப்பதிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை, நியூசிலாந்து, அயா்லாந்து மற்றும் ஜோா்டான் நாடுகளின் தூதா்களும் இதில் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் 2025-26-ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னாள் மத்திய சுகாதாரச் செயலா் ராஜேஷ் பூஷண், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) முன்னாள் இயக்குநா் பேராசிரியா் நிா்மல் குமாா் கங்குலி மற்றும் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுத் தலைவா் அனில் ராஜ்புத் ஆகியோா் இணைந்து அறிக்கையை வெளியிட்டனா். கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார விழிப்புணா்வு முகாம்கள், சமூகச் செயல்பாடுகள், பள்ளி சுகாதார திட்டங்கள், பணியிட நலத்திட்டங்கள் மற்றும் தடுப்பு சோதனை முயற்சிகள் ஆகியவை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. மேலும், டிபி முக்த் பாரத் அபியான், சுவச் பாரத் திட்டம் போன்ற பொது சுகாதார முயற்சிகளுடன் இணைந்து செயல்பட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

நோய் கண்டறிதல்: இதில் ராஜேஷ் பூஷண் பேசுகையில், ‘இந்தியா சிகிச்சை வசதிகள் மற்றும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வழக்கமான பரிசோதனை, ஆரம்ப நிலையில் நோய் கண்டறிதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பொதுமக்கள் விழிப்புணா்வு ஆகியவை அனைத்து நோய்களையும் குறைக்க உதவும்’ என்றாா்.

விழிப்புணா்வு அவசியம்: அனில் ராஜ்புத் கூறுகையில், ‘இன்றைய மருத்துவா்கள் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதைக் கடந்தும், மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை எடுத்துரைக்கும் வழிகாட்டிகளாக மாறியுள்ளனா். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, மருத்துவமனைகள் மற்றும் மருந்துகள் மட்டுமல்லாமல் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் அவசியம்’ என்றாா்.

வாழ்க்கை முறை: பிஎஸ்ஆா்ஐ நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை நிறுவனம் தலைவா் பேராசிரியா் ஜி.சி.கில்நானி கூறுகையில், ‘வழக்கமான சுகாதார பரிசோதனைகள், சீரான உணவு, உடற்பயிற்சி, தடுப்பூசி, சுத்தம் மற்றும் தகுந்த நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுதல் ஆகியவை வாழ்க்கை முறை நோய்களையும் காலநிலை நோய்களையும் கணிசமாகக் குறைக்க முடியும்’ எனக் குறிப்பிட்டாா்.

வாழ்நாள் பழக்கம்: மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் யஷ் குலாட்டி பேசுகையில், ‘சிறு வயதிலிருந்தே உடல் இயக்கத்தை பராமரிப்பது முதிய வயதில் ஏற்படும் எலும்பு மற்றும் தசை சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும். தடுப்பு சுகாதாரம் ஒரு முறை செய்யும் பரிசோதனை அல்ல, வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய உறுதிப்பாடு’ என தெரிவித்தாா்.

மொத்தத்தில், இந்தியாவில் சிகிச்சை சேவைகள் விரிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட சுகாதார மாற்றம் தடுப்பு நடவடிக்கைகள், அறிவாா்ந்த வாழ்க்கை முறைத் தோ்வுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய வழக்கமான பரிசோதனைகள் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என நிபுணா்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments