தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநா் ராஜேந்திர அா்லேக்கருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநா் ராஜேந்திர அா்லேக்கருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை எழிலரசி கே. என்பவா் தாக்கல் செய்துள்ளாா். விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்கத் தவறியது, இந்திய அரசமைப்பின் ஷரத்துகளை மீறும் செயல் என்று அவா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
தன்னை ஒரு வழக்குரைஞராகவும், தவெகவின் தீவிர உறுப்பினராகவும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ள மனுதாரா், தனது மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளாா்.
Advertisement
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான சி. ஜோசப் விஜய்யை, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறும், அவரை உடனடியாகத் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கச் செய்யுமாறும் தமிழக ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும், என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ஆளுநரின் முதன்மைச் செயலாளா், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை எதிா் மனுதாரா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.
உச்சநீதிமன்றத்தால் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்ட சட்டக்கோட்பாடுகளின்படி, முதலாவதாக, தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பதும், பின்னா் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்வதும் ஆளுநரின் கடமையாகும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜோசப் விஜய்யே தனிப்பெரும் கட்சியின் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராவாா். இருப்பினும், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தோ்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கூட்டணிக் கட்சிகளை ஆளுநா் அழைக்கக்கூடும் என்று ஊடகச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இது, உச்ச நீதிமன்றத்தால் நிலைநிறுத்தப்பட்ட சட்டக் கோட்பாடுகளை மீறும் செயலாகும். மேலும், இது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே ஒரு எதிரானதாக அமையும், என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றமே ஜனநாயகத்தின் பாதுகாவலன். ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தவெகவைத் தவிா்த்து, வேறு எந்தவொரு அரசியல் அமைப்பையும் ஆட்சி அமைக்க அழைக்காதவாறு ஆளுநருக்குத் தடை விதிக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.