முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Updated On : 21 மே 2026, 5:02 am IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ஆம் தேதி நடந்த தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு, ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், நடைமுறைகளுக்கும் இணங்க நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதன்படி, ஆட்சியமைக்க விரும்பும் எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ குறைந்தது 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) 108 இடங்களை வென்றது. இதையடுத்து தவெக பல்வேறு கட்சிகளிடமிருந்து ஒரே இரவில் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு கையொப்பங்களைப் பெற்றது. ஆனால், அக்கட்சித் தலைவர் தங்கள் கட்சிகள் தவெகவுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை என்று கூறினர்.

அதிமுக எம்எல்ஏக்களில் 24 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் கட்சிக்குள் பிளவுகளை வெளிப்படுத்தினர். தவெக சுமார் 144 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குச் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதாகவும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தப் பணிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

எனவே, மே 13, 2026 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இடம் பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.