முகப்பு
திருநெல்வேலி

பெருகும் கழிவுகளால் தவிக்கும் தாமிரபரணி!

அம்பாசமுத்திரம், ஜன. 26: பொதிகை மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பெரிதும் மாசுபட்டு வருகிறது. இந் நதியைச் சீரமைக்க அரசு நடவடிக்க

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:31 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், ஜன. 26: பொதிகை மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பெரிதும் மாசுபட்டு வருகிறது. இந் நதியைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் பூங்குளம் என்ற இடத்தில் தாமிரபரணி உற்பத்தி ஆகிறது. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை காலங்களில் தொடர்ந்து நீராதாரம் உள்ளதால் இது ஜீவநதியாகத் திகழ்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கி.மீ தூரம் பாய்ந்து புன்னக்காயலில் இந் நதி கடலில் கலக்கிறது.

  இந் நதியில் மலைப்பகுதியில் வெள்ளாறு, பேயாறு, காரையார், பாம்பார், சேர்வலாறு ஆகிய துணை நதிகளும், சமவெளிப் பகுதியில் மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சித்தாறு, ராமநதி ஆகிய துணை நதிகளும் கலக்கின்றன. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களின் முழு பாசனத் தேவை மற்றும் குடிநீர்த் தேவையினை தாமிரபரணி பூர்த்தி செய்கிறது.

  தாமிரபரணி நதியின் குறுக்கே வடிநிலப் பகுதியில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா அணை, ராமநதி அணை, குண்டாறு அணை, கருப்பாநதி அணை உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. பாசன வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய 7 கால்வாய்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய்கள் ஆகிய 4 கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

  தாமிரபரணி நதியின் மிக முக்கிய துணை நதியான சிற்றாறு தென்காசி வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. தாமிரபரணி நதியில் கலப்பதற்கு முன் சிற்றாற்றில் ஐந்தருவி, மோட்டையாறு, குண்டாறு, ஹரிஹரா நதி, அழுதகண்ணியாறு, கருப்பாநதி, அனுமாநதி, உப்போடை ஆகிய துணை நதிகள் கலக்கின்றன.

  தாமிரபரணி வடிநிலப் பகுதியில் நீண்ட கால புள்ளி விவரங்களின் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 1082 மி.மீ மழை பெறப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

  வற்றாத நதி, புண்ணிய நதி என பெயர் பெற்று திகழும் இந்நதி பல்வேறு காரணங்களால் பெருமளவில் மாசுபட்டு வருகிறது. ஆற்றின் கரையில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலக்கின்றன. இது தவிர தொழிற்சாலை கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. மேலும் நதியிலும், பாசனக் கால்வாய்கள், கண்மாய்களில் ஆகாயத் தாமரை, காட்டாமணக்கு ஆகியன வளர்ந்து பாசனத்திற்கு தடையாக உள்ளன. இதனால், தாமிரபரணி மாசுபட்டு வருகிறது. இப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

  இந் நதியின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் உணவுத் தேவை பூர்த்தியாவதுடன், குடிநீர்த் தேவையும் பூர்த்தியாகிறது. எனவே, மாசுபடும் தாமிரபரணி நதியை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  எனவே தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி நதி மீட்க சீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.

தாமிரபரணியை மீட்க மெகா திட்டம் தேவை: எம்.எல்.ஏ

இது குறித்து மணிமுத்தாறு பிரதான கால்வாய், பெருங்கால் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பா. வேல்துரை எம்எல்.ஏ (காங்கிரஸ்) கூறியதாவது:

  தாமிரபரணி நதி அமலைச் செடிகள், காட்டாமணக்கு செடிகளால் தூர்ந்து வருகிறது. இதனால் நதியின் போக்கு மாறி விட்டது. ஏற்கெனவே போதிய மழை இல்லாமல் தாமிரபரணி பாசனத்தில் பற்றாக்குறை உள்ளது.  இந் நிலையில் தாமிரபரணி நதி மாசுபட்டு வருவதால் கடை மடைக்கும் நீர் கிடைக்காத நிலை உள்ளது. மேலும் விவசாயம், தொழிற்சாலை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

  எனவே, தாமிரபரணியை முழுமையாகப் பராமரிக்க வேண்டும். நதியில் இருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும். இதற்காக அரசு தாமிரபரணி சீரமைப்புக்காக மெகா சிறப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினால் மட்டுமே நதியைப் பாதுகாக்க முடியும். இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் பாசனம் பொய்க்க வாய்ப்புள்ளது. தாமிரபரணி நதியைச் சீரமைப்பதன் மூலம் வீணாகும் 40 சதவிகித நீரை சேமித்து  பாசனம், குடிநீர், தொழிற்சாலை தேவைக்கு வழங்க முடியும்.

  நதியைச் சீரமைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளேன். அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் தாமிரபரணி சீரமைப்பு குறித்து வலியுறுத்துவேன் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →