திருநெல்வேலி

நெல்லை அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனம் எப்போது?

திருநெல்வேலி, அக். 8: திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.  இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரின் பதவிக் காலம் நிற

ப. இசக்கி

திருநெல்வேலி, அக். 8: திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

 இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரின் பதவிக் காலம் நிறைவு பெற்று மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான "தேடுதல் குழு' கூட இன்னும் நியமிக்கப்படவில்லை.

 திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 2007-ல் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு மதுரையிலும் ஒரு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

 திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்  தொலையுணர்வு தொழில்நுட்ப மைய இயக்குநர் சு. காளியப்பன் 2007 செப்டம்பர் 17-ல் பொறுப்பேற்றார்.

 மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைந்த காளியப்பன் கடந்த மாதம் 16-ம் தேதி விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதே துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

 துணைவேந்தர் இல்லாத நிலையில், அன்றாட அலுவல்களை மேற்கொள்ள பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 3 பேரைக் கொண்ட குழுவை ஆட்சிக்குழுவானது பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

3 பேர் கொண்ட குழுவானது புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் அன்றாட பணிகளை கவனிக்கும்.

"தேடுதல் குழு': பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்று பேரைக் கொண்ட "தேடுதல் குழு' நியமிக்கப்படுவது வழக்கம். அதில் ஒருவர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு மூலம் பரிந்துரை செய்யப்படுவார்.

மற்றொருவர் ஆளுநர் தரப்பிலும், மூன்றாவது நபர் அரசு தரப்பிலும் நியமிக்கப்படுவர். இக்குழுவினர் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான மூன்று பேரை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வர். அவர்களில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து துணைவேந்தராக நியமிப்பார்.

 திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய இப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவானது, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பழனிச்சாமியை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஆளுநர் தரப்பு பிரதிநிதியும், அரசு தரப்பு பிரதிநிதியும் இன்னும் நியமிக்கப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. எனவே, புதிய துணைவேந்தர் நியமனம் காலதாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.

 பொதுவாக புதிய துணைவேந்தரை நியமிக்க 2 மாத கால அவகாசம் தேவைப்படலாம் என்ற நிலையில், அதற்கான ஆரம்பகட்ட பணிகளே இன்னும் மேற்கொள்ளப்படாததால் துணைவேந்தர் நியமனம் மேலும் காலதாமதமாகலாம் அல்லது அவசரகதியில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காலதாமதம் ஏன்: பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக் காலம் முடிவடையும் சூழ்நிலையில் வழக்கமாக அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகளை இரண்டொரு மாதங்களுக்கு முன்பாகவே அரசு மேற்கொள்வதுண்டு.

 ஆனால், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த காளியப்பனின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாலும், இதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட திருச்சி, கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஒப்பிடும்போது திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பல்வேறு வகைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாலும், பெரிய அளவில் புகார்கள் எதுவும் இல்லாததாலும் காளியப்பனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் எண்ணத்தில் அரசு இருந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு பதவிக் காலத்தை நீடிக்கும்போது அதற்கான கோரிக்கையை துணைவேந்தர் அரசிடம் அளிக்க வேண்டும்.

 இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது ஆட்சிக் குழு உறுப்பினரான என். மாலைராஜாவால் அசம்பாவிதம் ஏற்பட்டது. அவர் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொடர்ந்து பதவியில் நீடிக்க காளியப்பன் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அவர் கேட்காமலேயே பதவி நீட்டிப்பு கொடுப்பதிலும், காளியப்பன் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்தித்த பின்பு அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது உகந்ததாக இருக்காது என ஆளுங்கட்சி கருதியதால பதவி நீட்டிப்புக்கு இடம் இல்லாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. காளியப்பனும் பதவிக் காலம் முடிவடைந்து விடைபெற்று விட்டார். இதுபோன்ற காரணங்களால் புதிய துணைவேந்தர் நியமனம் காலதாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT