திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நெல் விதை தட்டுப்பாடு விவசாயிகள்அவதி

திருநெல்வேலி, அக். 14: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானப் பருவ சாகுபடிக்கு தேவையான அம்பை-16, ஐ.ஆர். 20 ஆகிய நெல் விதை ரகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இம் மாவட்டத்தில் தென் மேற்குப் பருவ மழை கால

ப. இசக்கி

திருநெல்வேலி, அக். 14: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானப் பருவ சாகுபடிக்கு தேவையான அம்பை-16, ஐ.ஆர். 20 ஆகிய நெல் விதை ரகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 இம் மாவட்டத்தில் தென் மேற்குப் பருவ மழை காலத்தில் கார் பருவ சாகுபடியும்,

வட கிழக்குப் பருவமழை காலத்தில் பிசானப் பருவ சாகுபடி நடைபெறும். தற்போது பிசானப் பருவ சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று பாவும் பணியைத்  தொடங்க வேண்டிய காலம் இது.

 பிசானப் பருவத்தில் அம்பை-16, அம்பை-18, ஆடுதுறை-36, ஆடுதுறை-39, ஆடுதுறை-43 ஆகிய நெல் ரகங்களை பயிரிடலாம் என வேளாண்மை துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இதில் விவசாயிகள் அவரவர் பகுதிக்கு ஏற்ற நெல் விதை ரகங்களைத் தேர்வு செய்து பயிரிடுவர். இந்த ரகங்கள் தவிர, விவசாயிகள் விருப்பத்தின்படி ஐஆர்-20 உள்ளிட்ட இதர பரிந்துரைக்கப்படாத நெல் ரகங்களையும் தேர்வு செய்து பயிரிடுவர்.

 தென்காசி, செங்கோட்டை, கடையம், முக்கூடல், பாளையங்கோட்டை, மானூர் ஆகிய பகுதிகளில் கார் பருவ அறுவடைப் பணிகள் முடிவடைய இன்னும் மூன்று வார காலம் ஆகும். இந்தப் பகுதிகளில் அறுவடை முடிவடைந்த பிறகுதான் பிசானப் பருவ சாகுபடி பணிகள் தொடங்கும். ஆதலால் அவர்களுக்கு இப்போது விதையின் தேவை எழாது.

 இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எதிர்பாராத வகையில் பெய்த மழையால் ராதாபுரம், நான்குனேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, சங்கரன்கோவில் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளின் விவசாயிகள் பிசானப் பருவ சாகுபடி பணியை முன்கூட்டியே தொடங்க ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், அதிக மகசூலை தரக்கூடிய நெல் ரகங்களான அம்பை-16, ஐஆர்-20 ஆகிய நெல் விதை ரகங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

 இம் மாவட்டத்தில் விதை ரகங்கள் மற்றும் வேளாண்மை இடுபொருள்களை விற்பனை செய்யும் சுமார் 30 வேளாண்மை விரிவாக்க மையங்கள் எதிலும் அம்பை-16 நெல் விதை இருப்பு இல்லை என்பதை வேளாண்மை துறை அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர். ஐஆர்-20 பரிந்துரைக்கப்பட்ட ரகம் இல்லை என்பதால் அரசு விதை கொள்முதல் செய்யவில்லை என்றும் அந்த விதையை  விவசாயிகள் தனியாரிடமே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தனியாரிடமும் அந்த விதை இருப்பு இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

 இம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரையில்  253.80 மெட்ரிக் டன் அம்பை-16 நெல் விதை ரகம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் பகுதிக்கு அனைத்து நெல் விதை ரகங்களின் மொத்த தேவை சுமார் 45 மெட்ரிக் டன் ஆகும். அதில் அம்பை-16 ரகம் மட்டும் 40 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவை அதிகரித்துள்ளதால் அம்பை-16 ரகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வேளாண்மை துறையினர் கூறுகின்றனர்.

 இரண்டு வாரம் ஆகலாம்: தற்போது கார் பருவ அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ள சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் அம்பை-16 விதை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதை பக்குவப்படுத்துதல், பொட்டலமிடுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த விதை நெல் விற்பனைக்கு வருவதற்கு இரண்டு வார காலம் ஆகலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, அம்பை-16 விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் அதுவரை காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

 வெளி மாவட்டங்களில் இருந்தும் இந்த விதை நெல்லை பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் வேறு மாவட்டங்களிலும் இந்த விதை நெல் இருப்பு இல்லை என்று மாநில வேளாண்மைத் துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 இதர ரகங்கள் இருப்பு: இம் மாவட்டத்தில் பிசானப் பருவத்தில் வழக்கமாக 69 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் நடவு செய்யப்படும். இந்த ஆண்டு கார் பருவத்தில் குறைவு ஏற்பட்டதால் அதை ஈடு செய்யும் வகையில் மொத்தம் 76 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் நடவு செய்ய வேளாண்மை துறையினர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.

 அம்பை-16 ரகம் இருப்பு இல்லாவிட்டாலும் இதர ரகங்கள் போதுமான அளவு இருப்பு இருப்பதாக வேளாண்மை துறையினர் கூறுகின்றனர். ஆடுதுறை-45 ரகம் 91 டன்னும், ஆடுதுறை-43 ரகம் 9 டன்னும், ஆடுதுறை-36 ரகம் 3 டன்னும், ஆடுதுறை-39 ரகம் 17  டன்னும், அம்பை-18 ரகம் 2 டன்னும், கர்நாடக பொன்னி ரகம் ஒரு டன்னும், திருச்சி-1 ரகம் ஒரு டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க யூரியா 3,606 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 2,177  டன்னும், பொட்டாஷ் 416 மெ. டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,582  டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உயிர் உரங்கள் 2.58 லட்சம் பொட்டலங்கள் (ஒரு பொட்டலம் என்பது 200 கிராம்) இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டு  அறை:  பிசானப் பருவ சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உதவவும், உரங்கள், இடுபொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனை வழங்கவும் திருநெல்வேலியில் உள்ள வேளாண்மை துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் "கட்டுப்பாட்டு அறை' ஒன்று இம் மாதம் 18 ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. அதன் தொலைபேசி எண்: 0462-2572514.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT