முகப்பு
திருநெல்வேலி

அ.தி.மு.க. அணியில் குமரி தொகுதி யாருக்கு?

கன்னியாகுமரி, மார்ச் 3: தமிழகத்தின் சென்டிமென்ட் தொகுதியாகவும், அமைச்சர் அந்தஸ்து பெற்றுத் தரும் தொகுதியாகவும் விளங்குவது கன்னியாகுமரி சட்டபேரவைத் தொகுதி. அ.தி.மு.க. கூட்டணியில் இத் தொகுதி யாருக்கு கி

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:43 PM
பகிர்:

கன்னியாகுமரி, மார்ச் 3: தமிழகத்தின் சென்டிமென்ட் தொகுதியாகவும், அமைச்சர் அந்தஸ்து பெற்றுத் தரும் தொகுதியாகவும் விளங்குவது கன்னியாகுமரி சட்டபேரவைத் தொகுதி. அ.தி.மு.க. கூட்டணியில் இத் தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்தொகுதியை தே.மு.தி.க. குறி வைத்து வேலைகளைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மீண்டும் போட்டியிடுவார் என்று மாற்றுக் கட்சியினாராலும்கூட பேசப்பட்டு வந்தது.

ஆனால், சுவாமிதோப்புக்கு ஜெயலலிதா வந்து சென்றபின்பு தொண்டர்களின் ஆரூடம் சற்றே மாறியது. மாவட்டச் செயலரான கே.டி.பச்சைமாலுக்குதான் கன்னியாகுமரி "ஜாக்பாட்' அடிக்கும் என்ற புதிய செய்தி அ.தி.மு.க.வினரிடம் உலவியது.

இதற்கு வலுசேர்க்கும் வகையில், கட்சித் தலைமை யாரை சுட்டிக்காட்டினாலும் வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை என்று தளவாய்சுந்தரம் பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார்.

இதற்கிடையே அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வும் இடம்பெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்பு, இத் தொகுதிப் பெறும் போட்டியில் தே.மு.தி.க.வினரும் பங்கேற்றுவிட்டனர்.

தொகுதி சீரமைப்பால் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தின் ஒரு பகுதி கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வந்துள்ளதுதான் இதற்கு முக்கிய காரணம்.

இது, தே.மு.தி.க.வின் துணைப் பொதுச் செயலர் ஆஸ்டின் வசிக்கும் பகுதி என்பதால் கூடுதல் பலத்துடன் இத் தேர்தலில் களமிறங்கலாம் என்பதே தே.மு.தி.க.வின் கணக்கு.

ஏற்கெனவே, நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆஸ்டின், 2006 தேர்தலில் இதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அவர், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தது அனைத்து கட்சியினரையும் புருவம் உயர்த்த செய்துவிட்டது. அவருக்குச் சாதகமான வாக்குகள் நிறைந்த பகுதி இப்போது கன்னியாகுமரி தொகுதிக்குள் வந்து விட்டதால் கன்னியாகுமரி தொகுதியை பெற்றுவிடுவதில் அவரும் குறியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரு நாள்களாக சென்னையில் முகாமிட்டுள்ள அவர், இதற்கான அடித்தளமிட்ட பின்புதான் திரும்புவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

வெற்றி என்பதை விட போட்டியிடுவது யார் என்பதே கன்னியாகுமரி தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி தேர்தல் ஜூரத்தை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.