குமரியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு!
கன்னியாகுமரி, ஜூலை 20: கன்னியாகுமரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்க
கன்னியாகுமரி, ஜூலை 20: கன்னியாகுமரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருள்களான கேரிபேக், பிளாஸ்டிக் கப் போன்றவற்றை தெருக்களில் வீசுவதால் சுற்றுப்புற சூழல் மாசுபட்டு வந்தது.
இதனால், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தியதால், கன்னியாகுமரியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
தடையை மீறி பயன்படுத்துபவர்கள் மீதும், கடை உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீதும் அபராதம் விதிக்க உள்ளூர் பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டது.
கடைகளில் துணிப்பைகள் மற்றும் பேப்பர்களால் ஆன பொருள்களின் பயன்பாடு அதிகரித்தது. பள்ளி, கல்லூரி, தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுவினர் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியாளர்களின் மாற்றங்களுக்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அண்மைக் காலமாக கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி முழுவதும் பரவலாக அனைத்துக் கடைகளிலும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்களின் பயன்பாடு காணப்படுகிறது. இதனால், சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை தீர்மானமாக நிறைவேற்றும்படி அறிவுறுத்தினராம்.
ஆனால், பேரூராட்சிக் கூட்டத்தில் ஏற்கெனவே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து விட்டதாகக் கூறி அந்தத் தீர்மானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி திமுக உறுப்பினர் ஏ.ராஜன் கூறியதாவது:
பிளாஸ்டிக் ஒழிப்பில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. அதனால், இப்போது பிளாஸ்டிக் கழிவு அதிகரித்து சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இவ் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்துவது அவசியம் என்றார் அவர்.
சமூக ஆர்வலரான எஸ்.அருள்ராஜ் கூறுகையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்காமல் தடுக்க, பேரூராட்சி அதிகாரிகள் கடைகளில் முன்பு போல் சோதனை நடத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க நகரின் எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகைகள் நிறுவுதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவின் தென்கோடி பகுதி சுகாதாரமற்றது என்ற முத்திரை சர்வதேச அளவில் விழவும் வாய்ப்புள்ளது என்பதே பொதுமக்களின் கவலை.