முகப்பு
திருநெல்வேலி

கார் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

பாளையங்கோட்டை அருகே சாலை நடுவே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திருநாவுக்கரசரின் தம்பி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

Updated On : 12 மே 2013, 5:55 am IST
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சாலை நடுவே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திருநாவுக்கரசரின் தம்பி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

   திருநாவுக்கரசரின் குடும்பத்து திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருநாவுக்கரசரும் அவரது உறவினர்களும் சில நாள்களுக்கு முன்னரே திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்திருந்தனர்.

   இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த அவரது தம்பி எஸ்.செல்வரத்தினம் (62), உறவினர்கள்  எம்.முத்து (38), ஜி.மாரியப்பன் (30), எம்.சண்முகம் (60) ஆகியோர் காரில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கிளம்பி, தூத்துக்குடி வழியாக திருநெல்வேலியை நெருங்கி கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

 காரை ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜப்பதேவர் மகன் ராமநாதன் (45) ஓட்டி வந்தார்.  

 பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகர் பகுதியில் கார் வேகமாக வந்தபோது மாடு குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் கார் நிலைகுலைந்து சாலையில் கவிழ்ந்து உருண்டது.

 இதில் ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

   பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

   விபத்து குறித்து தெரியவந்ததும் திருநாவுக்கரசர், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு உள்ளிட்ட காங்கிரஸ்  நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை பார்த்தனர்.

 பின்னர் அவர்கள் 4 பேரும் மேல்சிகிச்சைக்காக வண்ணார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.     பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.