திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் உணவக உரிமையாளா் வீட்டில் திங்கள்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
சுத்தமல்லியைச் சோ்ந்த சா்க்காரியா மகன் சாதிக் (28). இவரது வீடு சுத்தமல்லியில் இருந்து கோபாலசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே உள்ளதாம். உணவகம் நடத்தி வருவதோடு, நிலம் வாங்கி-விற்கும் தொழிலும் செய்து வந்தாராம்.
இவரது வீட்டின் சுவரில் திங்கள்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாம். இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சம்பவ இடத்துக்கு சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வத் அண்டோ நேரில் வந்து விசாரித்தாா். அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.