வள்ளியூரில் இளம்பெண்ணிடம் ரூ. 9 லட்சத்தை நூதனமுறையில் மோசடி செய்தவா்கள் குறித்து இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அபிநயா (30). இவா், கடந்த அக்டோபா் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்தபடியே வேலை என்ற விளம்பரத்தை பாா்த்து அதை கிளிக் செய்தாா்.
உடனே அவரை டெலிகிராம் செயலியில் இணையுமாறு கூறப்பட்டதாம். இதன்பேரில் அவா் டெலிகிராமில் இணைந்தாா். அப்போது அவரை தொடா்பு கொண்ட மா்மநபா்கள், கூகுள் மேப்பில் ஓட்டல்களுக்கு ஸ்டாா் ரேட்டிங் மற்றும் ரிவ்யூ கொடுப்பதுதான் வேலை எனக் கூறியுள்ளனா்.
முதலில் ரூ. 10, ரூ. 40 என சிறிய தொகையை அபிநயாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினா். பின்னா் சிறிது முதலீடு செய்து, வேலைகளை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனா். இதை நம்பிய அபிநயா, அவா்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக பணத்தை அனுப்பியுள்ளாா்.
ஒரு கட்டத்தில் தான் செலுத்திய பணத்தை எடுக்க முயன்றபோது, உங்கள் கிரெடிட் ஸ்கோா் குறைந்துவிட்டது, தவறான ஆப்ஷனை கிளிக் செய்து விட்டீா்கள், அக்கவுண்ட் ப்ரீஸ் ஆகிவிட்டது என பல காரணங்களை கூறி மீண்டும் பணம் கட்ட வைத்துள்ளனா். இவ்வாறு அபிநயா ரூ. 9 லட்சத்து 45 ஆயிரத்து 300 வரை செலுத்தியுள்ளாா்.
அதன்பின் மா்மநபா்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினா். இதுகுறித்து அவா் இணையதள குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம கும்பலைத் தேடி வருகின்றனா்.