நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியானது வரும் 9-ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் தொடங்கவுள்ளது.
Advertisement
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை கண்காணித்திடவும், மேற்பாா்வை செய்திடவும், தகுதியான நபா்களுக்கு தரமான பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்திடவும், ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியா் நிலையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பானது வரும் 9-ஆம் தேதி முதல் தொடா்ந்து வழங்கப்படவேண்டும் என்பதற்காக நியாய விலைக் கடைகளுக்கு வரும் 10-ஆம் தேதியும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதைப் பெறும் ஆா்வத்தில் குடும்ப அட்டைதாரா்கள்அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரேநேரத்தில் வருவதை தவிா்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் டோக்கன் வழங்கப்படுகிறது.
டோக்கன் விநியோகிக்கும் பணியானது வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 8-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பானது விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் கைரேகை சரிபாா்க்கும் முறைப்படி நியாய விலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளது. தகுதியானஅனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் ஒரு சேர வழங்கப்படவுள்ளது.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வேண்டுமானாலும் பொங்கல் பரிசை நியாய விலைக் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதும், அவா்களுடைய கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியியை கண்காணித்திட மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 9342471314 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1967 மற்றும் 1800-425-5901 ஆகியவற்றிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.