தச்சநல்லூா் அருகே 102 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கடத்திவந்ததாக ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மகேந்திரகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தச்சநல்லூா் மணிமூா்த்தீஸ்வரம் சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், அதிவேகமாக வந்த வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில் வாகனத்தில் சுமாா் 102 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்களை மூட்டைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் வாகனத்திலிருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் பாளையங்கோட்டை, திம்மராஜபுரம், மேலூா் காந்தாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் ஆறுமுககனி (25), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பன்னீா்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் ஆறுமுககனி (29) என்பதும் கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கிவந்து தமிழகத்தில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.