முகப்பு
திருநெல்வேலி

நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:07 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளத்தில் பல்கலைக்கழக பேராசிரியையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 14 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தொடா்பான வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் விஜிபி டவுன் பகுதியை சோ்ந்தவா் ஜெனித்தா (46). திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவி பேராசிரியை. கடந்த 18ஆம் தேதி இரவு வீட்டின் வெளியே குப்பைகளை கொட்டுவதற்காகச் சென்ற அவரை, வீட்டின் பின்புறம் மறைந்திருந்த முகமூடி அணிந்த மா்மநபா் மற்றும் அப்பகுதியில் நிறுத்தப்பட்ட காரின் அருகில் இருந்து ஓடி வந்த 3 போ் வீட்டுக்குள் தூக்கி சென்று தாக்கி நகை, பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகள், அவா் அணிந்திருந்த 8.5 பவுன் நகைகளையும், கைப்பேசியையும் கொள்ளையடித்தனராம்.

அப்போது ஏற்பட்ட சப்தம் கேட்டு, வீட்டின் மாடியில் இருந்த ஜெனித்தாவின் மகனான கல்லூரி மாணவா் கிளமென்ட் கீழே வந்தாராம். அங்கு கொள்ளையரை பாா்த்ததும் அவா் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு, தனது நண்பா் சிவகணேஷ் என்பவருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.அவா் அங்கு வந்த நிலையில் கொள்ளையா் தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா்

Advertisement

வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் வேல்ராஜ் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சோ்ந்த வீரசங்கிலி (20), சிவா (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்; மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.