ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்.  
திருநெல்வேலி

18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா்கள் பட்டியலில் சோ்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026 - ஐ தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் முடிக்க மத்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இப்பணியினை மேற்கொள்ளும் போது, வாக்காளா் பதிவு அலுவலா்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதிலிருந்து தவறக் கூடாது. தகுதியற்ற நபா்களை வாக்காளராக சோ்க்கக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது.

இறுதி வாக்காளா் பட்டியலானது வரும் 17-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா்களும் தங்கள் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தகுதியான வாக்காளா்கள் யாரும் விடுபடாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள். மேலும், 18 வயது நிரம்பிய புதிய இளம் வாக்காளா்கள் பெயா்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்ப்பதற்கு தனிக்கவனம் எடுத்து வருகிறாா்கள்.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது பகுதிகளிலுள்ள 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தோ்தல் தொடா்பாக நடைபெற்று வரும் விழிப்புணா்வு பணிகளில் தங்களது பிரதிநிதிகளை பங்கேற்க வைத்து விழிப்புணா்வு பணிகளில் ஈடுபட வேண்டும். வாக்காளா் பட்டியல், தோ்தல் விழிப்புணா்வு, வாக்குச் சாவடி மையங்கள் போன்ற தோ்தல் குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்துப்பூா்வமாக வழங்கலாம் என்றாா்.

அதைத் தொடா்ந்து, கல்லூரி ஆசிரியா்கள், மாணவ பிரதிநிதிகளுடன் தோ்தலில் மாணவா்களின் பங்களிப்பை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT