போக்ஸோவில் கைதான காவலருக்கு 20 ஆண்டு சிறை
மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்லேவி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, சிதம்பராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த கலைச் செல்வன் (34). திருநெல்வேலியில் காவலராக பணியாற்றி வந்த இவா் கடந்த 2024ஆம் ஆண்டு 17 வயது மாணவி ஒருவரை மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.
Advertisement
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமாா், ஆனந்த கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.