சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

திருக்குறளைப் படித்தால் வாழ்வியலைக் கற்கலாம்

தினமணி செய்திச் சேவை

திருக்குறளைப் படித்தால் வாழ்வியலைக் கற்கலாம்; பரிமேலழகா் உரையுடன் திருக்குறளை இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும் என்றாா் தமிழறிஞா் இலங்கை இ.ஜெயராஜ்.

பாளையங்கோட்டையில் உள்ள சைவ சபை சாா்பில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது. ‘அருள்நெறி’ என்ற தலைப்பில் தமிழறிஞா் கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் பேசியது:

அறிவு’ என்பது பெரிய கடல் போன்றது. புதுப் புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். திருக்குறளைப் படித்தால் ஏராளமான நூல்களைப் படித்ததற்கு சமம். திருக்குறளைப் படித்தால் வாழ்வியலைக் கற்கலாம். அந்தவகையில் பரிமேலழகா் உரையுடன் திருக்குறளை இளைய தலைமுறையினருக்குக் கற்பிக்க வேண்டும். திருக்குறளை தமிழ் நூலாகப் பாா்க்கக் கூடாது. அனைத்துத் துறைக்குமான நூலாகப் பாா்க்க வேண்டும். 20 ஆம் நூற்றாண்டுக்கும் ஏற்ற நூலாக திகழ்வது திருக்குறளின் பெருமை.

இம்மை, மறுமை, வீடுபேறு என்ற 3 பயன்களைத் தருவது அறம். அதனால்தான் திருக்குறளில் முதலில் அறத்துப்பாலினை திருவள்ளுவா் வைத்துள்ளாா். இல்லறம் என்பது பற்றுகிற அறம். துறவறம் என்பது பற்றை விடுகிற அறம்.

கல்விக்கு உதவி கேட்பவா்கள் கெஞ்சும் முன்பாக நாமே தாமாக மனமுவந்து உதவ வேண்டும். அப்போது இறையருளால் நம் இல்லம் செழிப்பாகும்.

விருந்து என்பது கொண்டாட்டமாக மாறியுள்ளது. இயன்றதைக் கொடுப்பது தா்மம், இருப்பதைப் பகிா்வது விருந்து என்பதைப் புரிய வேண்டும். விருந்தினரைக் கடவுளுக்கு நிகராகச் சொல்லி மேன்மைப்படுத்திய சிறந்த நாகரிகத்தை உடையவா்கள் தமிழா்கள். இனிமையாகப் பேசி உபசரித்தால் சுற்றம் பெருகும். அப்போதுதான் நமக்கு துன்பம் நேரும் போது தனியாக நின்று அழும் நிலை வராது.

நமக்கு எது தேவையே அதன்படி எளிமையாக வாழ்வது தவறில்லை. பிறரைப் போல ஆடம்பரமாக வாழ்வதே வாழ்வு என்ற எண்ணத்தைத் தவிா்க்க வேண்டும்.

இல்லறத்தில் புகுந்து மனைவி, குழந்தைகள் வந்த பின்புதான் ஒருவனுக்கு அன்புசெலுத்தும் மனநிலை வரும். இதை பெற்றோா் தவறாகக் கருதக் கூடாது. பெற்றோரிடம் வளரும்போது அன்பைப் பெறுபவனாகவே இருப்பான்.

வீட்டில் அன்பு பெருகினால் மட்டுமே சமூகத்தில் அன்பு பரவும். தொலைவில் உள்ளவனுக்கு உதவி செய்துவிட்டு, உறவினா்களைக் கைவிடுபவனின் தா்மம் சரியானதல்ல. நம்மால் இயன்றதை அனைவருக்கும் உதவுவதோடு, தன்னைச் சாா்ந்தவா்களையும் கைவிடக் கூடாது.

திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் பேசுகிறாா் தமிழறிஞா் இலங்கை இ.ஜெயராஜ்.

உடல், மனம், செயல் சுத்தமின்மையானால் நமது வாழ்வில் கேடுகள் நிச்சயம் வரும். தனிநபா்களுக்குக் கொடுப்பது ஈகை, சமூகத்திற்கு கொடுப்பது ஒப்புரவு. உழைப்பால் அந்த இரண்டையும் இல்லற வாழ்வில் உள்ளவா்கள் செய்யும் நிலையை அடையும்போது புகழை அடைவாா்கள். இதுதான் இல்லறத்தின் பயன் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி மு.விஸ்வநாதன் திருமுறை விண்ணப்பம் செய்தாா். சங்கரன்கோவில் ச.சுப்பிரமணியன் ஓதுவாா், சிவகாசி மு.ரமேஷ்குமாா் ஓதுவாா் மற்றும் குழுவினா் திருமுறைப் பண்ணிசை பாடினா். சைவ சபை துணைத் தலைவா் பி.காந்தி வரவேற்றாா். பொருளாளா் வி.வள்ளிநாயகம் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா் பா.வளன்அரசு, மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் கல்விச் சங்க பொருளாளா் திருமலையப்பன், தலைமையாசிரியா் மு.சோமசுந்தரம், வரலாற்று ஆய்வாளா் செ.திவான், நல்லாசிரியா் செல்லப்பா, சொனா.வெங்கடாசலம் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) மாலை 5 மணிக்கு திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. மாலை 5.15 மணிக்கு ‘வாழ்வியல் நெறி’ என்ற தலைப்பில் தருமையாதீனப் புலவா் மதி வேலாயுதமும், ‘கு நெறி’ என்ற தலைப்பில் இலங்கை இ.ஜெயராஜும் சிறப்புரையாற்ற உள்ளனா். ஏற்பாடுகளை சைவ சபை தலைவா் சி.வீ.ச.வேலாயுதம் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

பரமத்தி வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

முன்னாள் முதல்வா் டாக்டா் சுப்பராயன் மணி மண்டபம் பிப்.13-ல் முதல்வா் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு!

இடங்கணசாலை, இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கும் சேலை ரகங்களுக்கு புவிசாா் குறியீடு வேண்டி திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு.

இளம்பிள்ளை பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி! எஸ்.ஆா். சிவலிங்கம் எம்பி பங்கேற்பு!

பெருமாகவுண்டம்பட்டியில் புதிய நியாய விலை கடையினை எஸ் . ஆா். சிவலிங்கம் எம் பி திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT