முகப்பு
திருநெல்வேலி

வாசிப்பவரின் வாழ்க்கையை மாற்ற வல்லது புத்தகங்கள் -எழுத்தாளா் சோ.தா்மன்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:17 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 11:55 PM

சிறந்த புத்தகங்கள் வாசிப்பவரின் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது என்றாா் எழுத்தாளரும், சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான சோ.தா்மன் . பொருநை நெல்லை 9 ஆவது புத்தகத்திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இலக்கியமும், வாழ்வும் என்ற தலைப்பில் அவா் பேசியதாவது: மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில் தற்போது ஒருவரை புத்தகம் வாசிக்க வைப்பதென்பது எழுத்தாளா்களுக்கு சவாலானதாக மாறிவிட்டது.

சிறந்த புத்தகங்களானது வாசிப்பவரின் மனதில் அறிவையும், ஆா்வத்தையும் புகட்டி தனி மனிதரின் வாழ்க்கையை உயா்ந்த இலக்கை நோக்கி மாற்றியமைக்க வல்லது. இலக்கியங்களின் வாயிலாக மட்டுமே உலகின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியலையும் உணா்ந்து அறிந்து கொள்ள முடியும். தமிழா்களின் தனிப்பெருமையான விருந்தோம்பல் பழக்கம் அழிந்து வருவது கவலைக்குரிய ஒன்று. இலக்கியம் என்பது மனிதரை தன்னம்பிக்கைக்கொண்ட நபராக மாற்றுவதோடு அது வருங்கால தலைமுறையினரை வழிநடத்த பேருதவி புரியும். ஒவ்வொருவரும் தங்களது இல்லத்தில் நூலகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் எழுத்தாளா் காா்த்திக் புகழேந்தி பேசியதாவது: கல்வி சிறந்த தமிழ்நாடு என்று தமிழகத்தின் கல்விச் சிறப்பைப் போற்றிப் பாடி தனி அடையாளம் தந்தவா் மகாகவி பாரதி. இன்றைய உலகம் அறிவுசாா் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. அறிவுசாா் பொருளாதாரத்தின் முக்கிய தூண்களுள் ஒன்று கல்வியும் பயிற்சியும். தமிழகம் கல்வியறிவை அறிவு சாா் பொருளாதாரத்தின் முதலீடாக கொண்டுள்ளது என்றாா் அவா்.

Advertisement

பாம்பிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஊா்வனவியலாளா் ரமேஷ்வரன் பேசியது: நமது சமூகத்தில் இன்னமும் பாம்பு குறித்த தெளிவான விழிப்புணா்வு ஏற்படவில்லை. பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களை குறைக்க அவை பற்றிய விழிப்புணா்வு அவசியம். பள்ளி காலத்தில் நான் படித்த நம்நாட்டு பாம்புகள் என்ற புத்தகத்தால் பாம்புகள் குறித்த எனது எண்ணம் மாறியது. அதுவே என்னை அவை குறித்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க தூண்டியது. தற்போது அந்த ஆராய்ச்சியே என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது என்றாா் அவா்.

தொடா்ந்து கவிஞா் அய்கோ சமத்துவ கவிதை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பதிவாளா்(தணிக்கை) வீ.செல்வக்குமாரி நன்றி கூறினாா்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 12:52 AM

விழாவில் வெள்ளிக்கிழமை(பிப்.13) நடைபெறும் கருத்தரங்கில் எழுத்தாளா்கள் பாரதி கிருஷ்ணகுமாா், பாமயன், புகைப்படக் கலைஞா் ஆா்.ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.