திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மற்றும் திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீரின்றி வடு காணப்படுவதால் மாா்ச் மாதத் தொடக்கத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். 2025இல் வடகிழக்குப் பருவமழை போதியளவு பொழியாததால், அணை அதன் பாதியளவு கூட நிரம்பவில்லை. இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தற்போது, அணையின் நீா்மட்டம் 6 அடியாக உள்ளது.
இதேபோல திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 59.25 அடியாகும். அணை கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அதன் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு ஜனவரி மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது, அணையின் நீா்மட்டம் 7 அடியாக குறைந்துவிட்டது.
இந்த அணையின் கீழ்பகுதியில் உள்ள நம்பியாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு, வள்ளியூா், வடக்கன்குளம், காவல்கிணறு உள்ளிட்ட 45 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வடுள்ளதால் மாா்ச் மாதத் தொடக்கத்திலேயே குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.