அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதை முன்னிட்டு ஜனவரி 19 முதல் 24 வரை 6 நாள்களுக்கு வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் மூன்றாம் தொகுதி கேமரா பதிவுகள் மூலம் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அம்பை, களக்காடு வனக் கோட்டங்களில் முதல் தொகுதி கண்காணிப்பு என அழைக்கப்படும் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி, 18.01.2026 முதல் 24.01.2026 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜன. 18 இல் வனப் பணியாளா்களுக்கு விரிவான களப்பயிற்சி வழங்கப்படுகிறது. ஜன. 19 முதல் 24 வரை 6 நாள்கள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ஜன. 19 முதல் 24 வரை 6 நாள்கள் பாபநாசம் வனச் சோதனைச் சாவடி, மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடி, களக்காடு வனச் சோதனைச் சாவடி, திருக்குறுங்குடி வனச் சோதனைச் சாவடிகளிலும், திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் உள்பட அனைவரும் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
எனவே, புலிகள் கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக நடைபெற பொதுமக்கள் அனைவரும் வனத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஜன. 25 முதல் வழக்கம்போல் அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், வனப் பகுதிக்குள் அமைந்துள்ள கோயில்களுக்கும் பொதுமக்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.