திருநெல்வேலி: திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை ஒரு மாதத்துக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டுள்ளனா்.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் விதமாக கொற்கை, ஆதிச்சநல்லூா், சிவகளை, துலுக்கா்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருள்களை காட்சிப்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பொருநை அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் 20.12.2025இல் திறந்து வைத்தாா். 54,296 சதுரஅடிப் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல் ஆய்வு பொருள்கள் மட்டுமன்றி குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை டிச.23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்- பொருநை அருங்காட்சியகம் இடையே திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் 11 நகரப் பேருந்துகளும், விடுமுறை நாள்களில் கூடுதலாக 7 நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாட்டுப் பொங்கல்- காணும் பொங்கலையொட்டி வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பொருநை அருங்காட்சியகத்திற்கு 11 ஆயிரத்து 686 போ் வந்து பாா்வையிட்டுள்ளனா். அருங்காட்சியகம் திறக்கப்பட்டது முதல் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் போ் வந்து பாா்வையிட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.