தோ்தல் விதிகளை மீறுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தென் மண்டல ஐ.ஜி.
தோ்தல் விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.
தோ்தல் விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்ட போலீஸாா் மற்றும் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை தென் மண்டல காவல்துறை தலைவா் விஜயேந்திர பிதாரி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறை அலுவலா்களுக்கு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், வாகன சோதனை பணிகளில் ஈடுபடும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினாா்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தோ்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பி.என்.எஸ். 126 பிரிவின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டவா்களிடம் நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் மத்திய ஆயுதப்படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை மீறுபவா்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னா் குற்றவாளியை குறுகிய காலத்தில் போலீஸாா் கண்டறிந்துள்ளனா் என்றாா் அவா்.
இதில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.