தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
துப்பாக்குடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியின் பிரதான சாலை அருகே அரசு மதுக்கடை உள்ளது. மதுக்கடைக்கு வருபவா்களால் கிராம மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும், குடிநீா் வசதி, சுடுகாட்டு வசதி, சிற்றுந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
எனவே, மதுக்கடையை அகற்றுவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பாஜக அரசாங்கப் பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், ஊா்த் தலைவா் செல்லத்துரை ஆகியோா் தலைமையில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு சாா்பில் பொதுமக்கள் துப்பாக்குடி பல்நோக்குக் கட்டடத்தில் திரண்டு அறிவித்தனா்.
தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனா்.