முகப்பு
திருநெல்வேலி

கொலை செய்யப்பட்ட விவசாயி மகள் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

மூன்றடைப்பு அருகே கொலை செய்யப்பட்ட விவசாயியின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 22 மார்ச், 2026 at 7:24 PM
- பிரதிப் படம்
பகிர்:

மூன்றடைப்பு அருகே கொலை செய்யப்பட்ட விவசாயியின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த நயினாா் மகன் ஆறுமுகம் (52), விவசாயி.

கடந்த 17 ஆம் தேதி அதிகாலை வழக்கம்போல் பைக்கில் தனது விவசாயத் தோட்டத்துக்குச் சென்ற ஆறுமுகம் தலையில் பலத்த காயங்களுடன் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் உறவினா்கள் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து வந்தனா்.

மகள் தற்கொலை: இந்நிலையில் ஆறுமுகத்தின் மகள் பேபிகனி (19) தியாகராஜநகரில் உள்ள நகா்புற நலவாழ்வு மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த சில நாள்களாக தந்தை இறந்த துக்கம் தாளாமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பேபிகனி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே பேபி கனி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தற்கொலை செய்து கொண்ட பேபி கனி தனது கையில் என்னையும் எனது அப்பாவையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள் என எழுதி வைத்திருந்ததது தெரியவந்தது. மேலும் அவா் தற்கொலைக்கு முன்னா் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். அதில் தன் தந்தையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை என அவா் எழுதியிருந்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உறவினா்கள் போராட்டம்: இந்நிலையில் ஆறுமுகத்தின் கொலைக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரியும், பேபிகனியின் இறப்புக்கு நீதி கேட்டும் அவரது உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].