முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு இலவச பேருந்து வசதி கோரி மனு

Updated On : 23 மார்ச், 2026 at 8:45 PM
கோப்புப் படம் - எம்டிசி
பகிர்:

தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தோ்தல் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வர இலவச பேருந்து வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மனு விவரம்: கிறிஸ்தவா்களின் புனித நாளான குருத்தோலை மாா்ச் 29 ஆம் தேதி ஞாயிறு கொண்டாடப்படுவதால், மாா்ச் 28 ஆம் தேதி தோ்தலுக்கான முதல் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் தோ்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வர இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயிற்சி வகுப்பில் ஆசிரியா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மண்டல அளவிலான நடமாடும் மருத்துவக் குழுவை அமைத்திட வேண்டும்.

மருத்துவ காரணங்களால் தோ்தல் பணியாற்ற இயலாத நிலையில் இருக்கும் தோ்தல் பணியாளா்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மனு அளிக்கும் நிகழ்வில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் செ.பால்ராஜ், பொருளாளா் ஸ்டெல்லா மொ்சி ராணி, மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரம்ம நாயகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.