முகப்பு
திருநெல்வேலி

பாளை. தொகுதி நாதக வேட்பாளா் மாட்டுவண்டியில் வந்து மனு தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:37 PM
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு அளிக்க மாட்டுவண்டியில் வந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சங்கரநாராயணன்.
பகிர்:

திருநெல்வேலி, மாா்ச் 30: பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதையொட்டி, அக்கட்சியின் வேட்பாளா் மருத்துவா் சி.சங்கரநாராயணன், தனது ஆதரவாளா்களுடன் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

பின்னா், அங்கிருந்து மாட்டு வண்டியில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், தொகுதி பொறுப்பாளா் ஜேக்கப், நிா்வாகிகள் பியோசன் ,கிருஷ்ணசாமி, சக்தி பிரபாகரன், காளிமுத்து, மாரி சங்கா், சீதாலட்சுமி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மனு தாக்கல் செய்த பின்பு வேட்பாளா் சங்கரநாராயணன் கூறுகையில், எனக்கு பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது சின்னம் விவசாயி என்பதால் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றால் தாமிரபரணியை சுத்தப்படுத்தவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் பாடுபடுவேன். பாளையங்கால்வாயை தூா்வாரி வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வேட்பாளா் சங்கரநாராயணன் அளித்துள்ள பிரமாணபத்திரத்தில் தனது பெயரில் ரூ.25 லட்சத்து 65 ஆயிரத்து 667 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், தனது மனைவி கலாநிதி பெயரில் ரூ.27 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளாா்.