கன்னியாகுமரி

மூலிகைத் தோட்டம், சுற்றுச்சுவரில் திருக்குறள்: புதுப்பொலிவு பெறும் நாகர்கோவில் அரசுப் பள்ளி

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு புதுப்பொலிவு பெற்று வருகிறது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த சேதுலெட்சுமிபாயின் நினைவாக இப்பள்ளிக்கு பெயர் சூட்டப்பட்டது. கடந்த 1928இல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1978இல் தமிழ், ஆங்கில மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளியில் தற்போது 1,640 மாணவர்கள் பயில்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்த இப்பள்ளி, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் தற்போது புதுப்பொலிவு பெற்று வருகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளித் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற விஜயன், முகநூல், கட்செவி அஞ்சல் என குழுக்கள் அமைத்து முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தார். இதன் மூலம் திரட்டப்பட்ட சுமார் ரூ. 7 லட்சத்தில், பழமை மாறாமல் பள்ளியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் சுத்தப்படுத்தப்பட்டு, அதில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயன் கூறியதாவது: இப்பள்ளியில் ஓடுகள், கண்ணாடி ஜன்னல்கள், குழாய்கள் உள்ளிட்டவை உடைந்தும், கட்டடங்களுக்கு புதிய வண்ணம் பூசாமலும் இருந்து வந்தது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களோடு கருத்து பகிர்ந்தோம். இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பிரேம், சதீஷ், விவேக் ஆகியோர் சேர்ந்து கட்டடங்களை புதுப்பிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். கெல்வின், ஜெசிந்த் ரவிகுமார் ஆகியோரது முயற்சியால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கிடைத்துள்ளது. சபரீசன், பரசுப்பிள்ளை ஆகியோர் அடங்கிய குழுவினர் 100 மேஜைகளை வழங்கியுள்ளனர். முன்னாள் மாணவர் குற்றாலிங்கம் செயலராக உள்ள நாகர்கோவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ரு.3 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை, மூலிகைத் தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளது. செல்வின்குமார் 1978இல் முன்னாள் மாணவர் சங்கத்தை அமைத்ததோடு, தற்போது அதன் மூலமாக 30 கணினிகள் வழங்கியுள்ளார்.
தாம் பயின்ற பள்ளியை மாணவர்கள் மறக்காமல் இருந்தால், எல்லா அரசுப் பள்ளிகளுமே புதுப்பொலிவு பெறும். இதை வருங்கால சந்ததிக்கு செய்யும் சேவையாக கருத வேண்டும் என்றார் அவர்.
அண்மையில் ஏழகரம் அரசுப் பள்ளியில் படித்த 7ஆம் வகுப்பு மாணவர் அவினாஷ் விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. அம்மாணவரின் குடும்பத்துக்கு இப்பள்ளி மாணவர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதே போல் இறச்சகுளத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு, இப்பள்ளி மாணவர் பிரதீப்பின் வீடு எரிந்து சேதமானது. இவரது குடும்பத்துக்கு பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம், நவீன் என்ற மாணவரின் பெற்றோர் ரூ.50 ஆயிரம் என ரூ. 60 ஆயிரத்தை பள்ளியின் பங்களிப்பாக வழங்கினர்.
சேவை உள்ளம் படைத்தவர்கள் தங்களின் மாணவ வாழ்க்கையை நினைத்து உதவிகள் செய்யத் தொடங்கினால் ஒவ்வோர் அரசுப் பள்ளியும் தனியார் பள்ளிக்கு நிகராக சிறப்பாக செயல்படும் என்பது திண்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT