கன்னியாகுமரி

ஒக்கி புயலால் அரசு ரப்பர் கழகத்துக்கு நெருக்கடி: ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன

DIN

ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்கள் சாய்ந்ததால், அந்த நிறுவனத்துக்கு பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அரசுத் துறை நிறுவனமாக அரசு ரப்பர் கழகம் உள்ளது. கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் வனத் துறையிடமிருந்து பெற்ற 5000 ஹெக்டேர் நிலத்தில் அரசு ரப்பர் தோட்டமாக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களில் ஏராளமானோருக்கு இங்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. தற்போது இந்நிறுவனம் அரசு ரப்பர் கழகம் என்ற பெயரில் இயங்குகிறது. மயிலாறு, கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை என 5 கோட்டங்களுடன், தாற்காலிக தொழிலாளர்கள் உள்பட சுமார் 2,200 தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் இங்குப் பணியாற்றுகின்றனர்.
நெருக்கடியில் ரப்பர் கழகம்: ரப்பர் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு ரப்பர் கழகம் தொடர்ந்து நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி போனஸ் வழங்குவதற்கும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கும் கடந்த சில ஆண்டுகளாக நீண்ட இழுபறி நிலை ஏற்பட்டு வருகிறது. 
முதிர்ந்த ரப்பர் மரங்களை உரிய காலத்தில் வெட்டி அகற்றிவிட்டு, மறு நடவு செய்வதில்கூட பிரச்னை இருந்து வருகிறது. கீரிப்பாறை, பரளியாறு, மணலோடை, மயிலாறு உள்ளிட்ட கோட்டங்கள் மற்றும் பிரிவுகளில் அண்மைக் காலமாக குறிப்பிட்ட பகுதிகளில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, புதிய ரப்பர் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்ற போதிலும், அகற்றப்பட வேண்டிய முதிர்ந்த ரப்பர் மரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
ஒக்கி புயலால் பாதிப்பு:  இந்நிலையில், ஒக்கி புயலால் அரசு ரப்பர் கழகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கீரிப்பாறை, மணலோடை, கோதையாறு கோட்டங்களில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இக்கோட்டங்களில் அண்மையில் நடப்பட்ட ரப்பர் கன்றுகள் உள்பட ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தும், ஒடிந்தும் விழுந்துள்ளன. இது ரப்பர் கழகத்திற்கு பேரிழப்பாகவே கருதப்படுகிறது. இதனால், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தாற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுவருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ரப்பர் கழகத்தையும், அதில் பணிபுரியும், தொழிலாளர்களையும், அலுவலர்களையும் பாதுகாக்கும் நோக்கில் அரசு இந்த நிறுவனத்திற்குத் தேவையான உதவிகளை செய்தால் மட்டுமே, இந்த நிறுவனம் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஐஎன்டியுசி தொழிற்சங்க குமரி மாவட்டத் தலைவர் சி. அனந்தகிருஷ்ணன் கூறியது:
ஒக்கி புயலால் முதற்கட்ட கணக்கெடுப்பில் சுமார் 38 ஆயிரம் மரங்கள் வரை சாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புயல் பாதிப்புகளை காரணம் காட்டி, தாற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் தொழிலாளர்களுக்கான வேலையை மறுக்கக் கூடாது. பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய நிவாரணம் பெற ரப்பர் கழக நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார் கூறியது:
ஒக்கி புயல் பாதிப்புகளிலிருந்து ரப்பர் கழகம் மீண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தேவையான நிதி வழங்க வேண்டும். புயல் பாதிப்பைக் கூறி தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கக்கூடாது. சாய்ந்துள்ள மரங்களை நேராக தூக்கி நிறுத்தவும், முழுமையாக விழுந்த மரங்களை உடனுக்குடன் ஏலம்விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT