முகப்பு
கன்னியாகுமரி

குளிர்கால இலையுதிர்வு: குமரியில் ரப்பர் பால்வடிப்பு நிறுத்தம்

குளிர்கால இலையுதிர் காலத்தையொட்டி, குமரி மாவட்டத்தில்  ரப்பர் மரங்களில் இலைகள் உதிர்வதால் பால்வடிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது.

Updated On : 24 ஜனவரி 2019, 1:12 am IST
பகிர்:

குளிர்கால இலையுதிர் காலத்தையொட்டி, குமரி மாவட்டத்தில்  ரப்பர் மரங்களில் இலைகள் உதிர்வதால் பால்வடிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலங்களில் மரங்கள் இலைகளை உதிர்த்து விடும். 
 இலையுதிர் குளிர்காலம் என்று அழைக்கப்படும் இக்காலத்திற்குப் பிறகு வசந்தகாலத்தில் மரங்களில் மீண்டும் அடர்த்தியாய் இலைகள் உருவாகும். தற்போது, குமரி மாவட்ட காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் வனப்பகுதிகளில் இலைசருகுகள் குவிந்து கிடக்கின்றன.
 ரப்பர் தோட்டங்களிலுள்ள மரங்களில் இலைகள் உதிர்வதால் மரங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன.  இந்த இலையுதிர் காலத்தில் ரப்பர் மரங்களில் பால் ஊறுவது குறைந்து விடுவதால் அவற்றிலிருந்து பால் வடிப்பதும்  படிப்படியாக  நிறுத்தப்பட்டு வருகிறது. அரசு ரப்பர் கழகம் மற்றும் பெரும் தனியார் தோட்டங்களில் 15 முதல் அதிகபட்சமாக 30 நாள்கள் மட்டுமே பால்வடிப்பு நிறுத்தப்படுகிறது. 
அதே வேளையில் சிறு ரப்பர் தோட்டங்களில் 2 மாதங்களுக்கு கூடுதலான நாள்கள் பால்வடிப்பு நிறுத்தப்படுகிறது.  சில தோட்டங்களில் நிறுத்தப்படாமல் பால்வடிக்கப்படுவதும் உண்டு. ரப்பர் மரங்களில் பால்வடிப்பு நிறுத்தப்படும் போது தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது. 
மீண்டும் பால் வடிப்பு:  மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்  மாதங்களில்  மீண்டும் தொடங்கும். அப்போது ரப்பர் மரங்களில் புதிய இலைகள் அடர்ந்து வளர்ந்து காணப்படும்.  இலையுதிர்வு காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளதாலும், ரப்பரின்  விலை கிலோ ரூ. 105 என்ற நிலையில் உள்ளதாலும் பெரும்பாலான விவசாயிகளும், தோட்ட நிர்வாகங்களும் ரப்பர் பால்வடிப்பை கூடுதல் நாள்கள் நிறுத்தி வைக்கவே தற்போது விரும்புகின்றன.
 அரசு நிவாரணம்: இலையுதிர் காலத்தில்  பால்வடிப்பு நிறுத்தப்படுவதால் ஏற்படும் வேலை இழப்பு காரணமாக ரப்பர் பால்வடிப்புத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்நேரத்தில் தொழிலாளர்களுக்கு அரசு  நிவாரணம் வழங்க வேண்டுமென்று தொழிலாளர் நல  அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.